வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இணைந்து செயற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் ஏழு அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்வதற்கு கம்பஹா பிரதான நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இவ்வழக்கு வெள்ளிக்கிழமை (24) கம்பஹா பிரதான நீதவான் பந்துல குணரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் தற்போதைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஜி.சி. பதுமசிறி விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், குறித்த அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணத்தடையை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டார். கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி கணேமுல்ல, பொல்லத்த பிரதேசத்தில் 9 கிலோ ஹெரோயின் மற்றும் 12 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்த வட்ஸ்அப் உரையாடல்களை ஆய்வு செய்தபோது, வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள ‘கொண்ட ரஞ்சி’ மற்றும் ‘திப்பிட்டிகொட லஹிரு’ ஆகிய கடத்தல்காரர்களுடன் குறித்த பொலிஸ் அதிகாரிகள் தொடர்புகளைப் பேணி வந்ததுள்ளமை தெரியவந்துள்ளது. மேலும், இப்பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட 3 கிலோ கொகைன் போதைப்பொருளை வாடகை கார் மூலம் கடத்தியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த அதிகாரிகளால் விசாரணைக்கு இடையூறு ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டே லின்டன் லெனார்ட் சில்வா உள்ளிட்ட 7 அதிகாரிகளுக்கும் இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டதுடன், விசாரணையின் முன்னேற்றத்தை உடனடியாக நீதிமன்றிற்கு அறிவிக்குமாறும் நீதிவான் விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.




