சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய மின்சாரம், எரிபொருள் மானியங்கள் வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைவதால் நாட்டில் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்வடையும். இதனால் மக்களுக்கு எழும் எதிர்ப்புகளையும் அரச ஊழியர்களின் போராட்டங்களையும் இராணுவ மற்றும் பொலிஸ் பலத்தைக் கொண்டு ஒடுக்குவதற்காகவே ஜனாதிபதியால் அத்தியாவசிய சேவை வர்த்தமானி நீடிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் கீழ் 695 மில்லியன் டொலர்களை அரசாங்கத்துக்கு வழங்குவதற்கு ஒப்புதலளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடனை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியம் பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
அதில் குறிப்பாக, பல பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான விபரங்களை அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், மின்சாரம், பெற்றோல், டீசல் போன்றவற்றுடனும் தொடர்புடைய பல நிபந்தனைகளையும் அவர்கள் அரசாங்கத்துக்கு முன்வைத்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம் வழங்கிய இந்த கடன் தவணையுடன் முன்னோக்கிச் செல்லும்போது, அவர்களுடன் உடன்பட்ட பல விபரங்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது. தற்போதைய நிலைவரப்படி, பெற்றோல் மற்றும் டீசலுக்கான மானியங்களை வழங்குவதற்காக 57 பில்லியன் ரூபாய் வரை செலவிடுவதற்கு அரசாங்கத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மின்சாரத்திற்கு வழங்கக்கூடிய அதிகபட்ச மானியமாக 15 பில்லியன் ரூபாய் வரை வழங்குவதற்கும் அவர்கள் அரசாங்கத்துடன் உடன்பாட்டை எட்டியுள்ளனர். இந்த மானியங்களை வழங்கக்கூடிய கால அவகாசம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் ஒரு காலப்பகுதியாகவே இந்த உடன்பாட்டின் மூலம் தெரியவருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசலுக்காக ஒதுக்கப்பட்ட 57 பில்லியன் ரூபா மற்றும் மின்சாரத்துக்காக ஒதுக்கப்பட்ட 15 பில்லியன் ரூபாவில் இந்த நேரத்தில் அரசாங்கம் எவ்வளவு தொகையைச் செலவிட்டுள்ளது என்பது இன்னும் சரியாகக் கணக்கிடப்படவில்லை.
எது எவ்வாறிருப்பினும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்டுப் பெற்றுக்கொண்ட இந்த 695 மில்லியன் டொலர்களுக்காக ஒப்புக்கொள்ளப்பட்ட பல நிபந்தனைகள் உள்ளன. குறிப்பாக, நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்கள் பலவற்றை நிறைவேற்றுவதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில்தான் அவர்கள் இந்தக் கடனை வழங்கியுள்ளனர்.
இதன் காரணமாக, எதிர்வரும் காலத்தில் அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுடன் ஒரு முரண்பாடான சூழ்நிலைக்குச் செல்லக்கூடிய ஒரு நிலைமை உருவாக வாய்ப்புள்ளது. அதாவது, தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரும்போது நாட்டின் மக்களுக்கு வழங்கிய பல வாக்குறுதிகள் உள்ளன.
அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதா இல்லையா என்ற விடயத்தில், எதிர்வரும் காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்டுள்ள விபரங்களை நிறைவேற்ற இந்த அரசாங்கம் முற்படும்போது பல்வேறு வகையான நெருக்கடி நிலைகள் உருவாகலாம்.
ஏனெனில், இந்த வழியில் செல்லும்போது அவர்களுடன் உடன்பட்டுள்ள முக்கிய விடயம் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது, மற்றும் பெற்றோல், டீசல் விலையை அதிகரிப்பதாகும். மேலும் டொலரின் பெறுமதியை அதிகரிப்பதன் மூலம், நாட்டில் உள்ள அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஏனைய அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலைகளுக்கு மத்தியில், ஜனாதிபதியால் வியாழனன்று மீண்டும் ஒருமுறை பல நிறுவனங்களை அத்தியாவசியச் சேவைகளாக பிகரடனப்படுத்தி ஒரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தித்வா புயலை முன்னிலைப்படுத்தியே குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான மானியங்கள் தொடர்பில் ஏற்கனவே பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில், இந்த பேரிடர் நிலைமையை முதன்மைப்படுத்தி, மீண்டும் ஒருமுறை பல அமைச்சுகளையும் நிறுவனங்களையும் அத்தியாவசியச் சேவைகளாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தியுள்ளனர். மின்சாரம், எரிபொருள் விநியோகம், மருத்துவமனைகள், பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்து போன்ற பல விடயங்கள் இந்த வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அத்தியாவசிய உணவு வழங்கல், நீர் வழங்கல், இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து அரச வங்கிகள், காப்புறுதிச் சேவைகள், நீர்ப்பாசனம், தொலைத்தொடர்பு மற்றும் ஊடகங்கள் போன்ற அனைத்தும் மீண்டும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
இப்போது நமக்கு இருக்கும் பிரச்சினை என்னவென்றால், குறிப்பாக எதிர்வரும் மாதங்கள் மிகவும் தீர்க்கமானவை. அது தீர்க்கமானதாக மாறுவதற்குக் காரணம், சர்வதேச நாணய நிதியம் வழங்கிய இந்தக் கடன் தவணையுடனும் அவர்களின் நிபந்தனைகளுடனும் முன்னோக்கிச் செல்லும்போது, நிச்சயமாக அதற்கு எதிராகச் சமூகத்திற்குள் ஒரு எதிர்ப்பு உருவாகும். அந்த எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் ஜனாதிபதி இந்த அவசர அத்தியாவசியச் சேவை வர்த்தமானியை மீண்டும் நீடித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்ட விடயங்களை நிறைவேற்றும்போது, எதிர்வரும் காலத்தில் நிச்சயமாக இதற்கு எதிராக, குறிப்பாக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்புகள் அரசாங்கத்தை நோக்கி வருதற்கான சாத்தியக்கூறுகளும் வழிகளும் உள்ள.
ஏனெனில், இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் மற்றும் அவர்கள் சமர்ப்பித்த கொள்கைப் பிரகடனம் ஆகியவை சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கும் அவர்கள் கூறும் விடயங்களுக்கும் முற்றிலும் முரணானதாகவே இருந்தன. இதனால்தான், பல அரச நிறுவனங்களையும் அமைச்சுகளையும் அத்தியாவசியச் சேவைகள் என வகைப்படுத்தி ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவித்தலை மீண்டும் நீடித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்ட விடயங்களை எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் நிச்சயமாக நிறைவேற்ற வேண்டியிருக்கும். அவ்வாறு நிறைவேற்றும்போது சமூகத்துக்குள் எழும் எதிர்ப்புகளையும், அதற்கு எதிராகப் போராடும் அரச ஊழியர்களையும் ஒடுக்குவதே இந்த வர்த்தமானிக்கு பின்னால் இருக்கும் அரசாங்கத்தின் தேவை என்பது தெளிவாகத் தெரிகிறது. இதுவே இதில் உள்ள பிரதானமான விடயமாகும்.
இல்லையெனில், அரசாங்கம் கூறுவது போலவே சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மானியங்கள் வழங்கப்பட்டு, அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருந்தால், மீண்டும் ஒருமுறை இவற்றை அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானி மூலம் அறிவிக்க வேண்டிய தேவை இல்லை.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்டுள்ள விபரங்களை நடைமுறைப்படுத்தும்போது எழும் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான பலத்தையும் சட்ட அதிகாரத்தையும் பெற்றுக்கொள்வதையே இந்த வர்த்தமானி மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
எனவே, இதனை ஒரு பக்கமாகப் பார்த்தால் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய அரசியல் வாக்குறுதிகளை முற்றாக மீறியுள்ளது. மறுபுறம், அரசாங்கம் தனது அரச அதிகாரம், இராணுவ பலம் மற்றும் பொலிஸ் பலத்தைப் பயன்படுத்தி இந்த எதிர்ப்புகளையும், மக்களின் போராட்டங்களையும் ஒடுக்குவதற்கும், இந்த வர்த்தமானியின் பலத்தைக் கொண்டு இவற்றை அடக்குவதற்கும் தான் ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவித்தலை நீடித்துள்ளார் என்றார்.





