பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்தினால் விரைவான மற்றும் வெளிப்படையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பௌத்த பிக்குகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கும், சமூகத்தை அமைதிப்படுத்துவதற்கும் சங்க நீதிமன்றம் போன்ற ஒரு பொறிமுறை இன்றியமையாதது. ‘சங்க நீதிமன்றம்’ அமைப்பது குறித்து கவனம் செலுத்துகிறேன் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் குற்றம்சாட்டி சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, திங்கட்கிழமை (01) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த வழக்கின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

சமூகத்தில் எந்நேரமும் பிரச்சினைகளும் சவால்களும் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. பிரச்சினைகள் இல்லாத, சவால்கள் இல்லாத ஒரு சமூகத்தை உலகில் எங்கும் காண முடியாது. அவற்றுக்கு முகம் கொடுத்து முன்னேறிச் செல்வதே அறிவார்ந்த செயலாக அமையும்.

இன்றைய நவீன உலகில் சமூக ஊடகங்களின் பயன்பாடு ஒரு பாரிய சவாலாக உருவெடுத்துள்ளது. உண்மை எது, பொய் எது என்று பிரித்தறிய முடியாத சூழலில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். பௌத்தம் என்பது மிகவும் சுதந்திரமான, ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட ஒரு தத்துவமாகும். தனது குருவைக்கூட விமர்சிக்கும் சுதந்திரத்தை வழங்கிய மதம் இது. இத்தகைய தாராளத்தன்மையைப் பயன்படுத்தி ஒரு சிலர் பௌத்தத்தையும் பிக்குகளையும் அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். பிழைகள் செய்பவர்கள் சமூகத்தில் மிகச் சிலரே. மனிதர்கள் இருக்கும் இடத்தில் பிழைகள் நடப்பது இயல்பு. அதற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் குறைகூறுவது ஏற்புடையதல்ல.

மேலும், நீண்டகாலமாக விவாதிக்கப்படும் ‘சங்க நீதிமன்றம்’ அமைப்பது தொடர்பான விடயம் குறித்து நான் கவனம் செலுத்துகிறேன். ஏனைய மத சமூகங்களில் இவ்வாறான உள்நாட்டு நீதிமுறைகள் காணப்படுகின்றன. 1956 ஆம் ஆண்டின் பௌத்த சாசன ஆணைக்குழுவின் அறிக்கையிலும் இது தொடர்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சங்க நீதிமன்றம் என்பது சாதாரண நீதிமன்றம் போன்ற ஒன்றல்ல் இது பிக்குகளின் நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை செய்து, தவறு செய்தவர்கள் யார், செய்யாதவர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் ஒரு முறையான பொறிமுறையாகவே இருக்க வேண்டும்.

தற்போது என்னால் எதிர்கொள்ளப்படும் இந்த வழக்கு சுமார் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. இது எவரையும் தாக்குவதற்கோ அல்லது நாட்டின் சொத்துக்களை அபகரிப்பதற்கோ தொடர்பானது அல்ல. நாட்டின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது தொடர்பாகக் குறிப்பிட்ட ஒரு கருத்திற்காகவே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்களை, சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒன்றிணைந்து கலந்துரையாடல் மூலம் தீர்த்துக்கொள்ளும் ஒரு பொறிமுறை இருந்தால், அது சமூகத்தின் சுமையைக் குறைக்கும்.

தற்போது சமூகத்தில் ஏற்படும் குற்றச்சாட்டுகளை விரைவாக விசாரணை செய்து தீர்ப்புகளை வழங்குவது அவசியம். ஒரு தவறு இழைக்கப்பட்டால், அது யார் செய்தாலும் தண்டனை வழங்கப்பட வேண்டும். தவறு செய்பவரின் ஆடை அல்லது அடையாளம் இங்கு முக்கியமல்ல. ஆனால், இவ்வாறான வழக்குகள் காலம் தாழ்த்தப்படும்போது, அரசியல் பின்புலங்கள் மற்றும் வேறுபட்ட கோணங்களில் சமூகத்தில் தேவையற்ற சந்தேகங்களும் கருத்து முரண்பாடுகளும் ஏற்படுகின்றன. எனவே, விரைவான நீதி பரிபாலனம் மூலம் இந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் மாத்திரமே சமூகத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்றார்.

Politics