கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வியின் பிரகாரம் மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றோம். ஏனெனில் அது மனித கண்ணியத்தை மீறுவதாகும். திருச்சபையின் போதனைகளுக்குள் எவ்வித மரண தண்டனையையும் விதிப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேவேளை, இலங்கை நீதித்துறையின் சுயாதீனத்தின் மீது நாம் முழு நம்பிக்கை கொண்டுள்ளோம். அதன் தீர்மானங்களிலோ அல்லது கலந்துரையாடல்களிலோ எந்த வகையிலும் தலையிடுவது இதன் நோக்கமல்ல என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார்.
விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேராயர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் விவாதச் சூழலில், கொழும்பு பேராயர் இல்லமானது இத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் முழுமையான ஒற்றுமையுடனும் ஒத்துழைப்புடனும் செயற்பட்டு வருகின்றது. இத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரி அல்லது சூத்திரதாரிகள் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் வெளிக்கொணர்ந்து, நாட்டின் சட்டத்திற்கு அமைய பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்குத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதே கொழும்பு பேராயர் இல்லத்தின் உறுதியான எதிர்பார்ப்பாகும் என்பதையும் உறுதிப்படுத்த விரும்புகின்றோம்.
நாட்டின் எந்தவொரு மத வழிபாட்டுத் தலத்திலோ அல்லது வேறு எந்தவொரு இடத்திலோ மீண்டும் நிகழக்கூடிய திட்டமிடப்பட்ட அல்லது தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுப்பது குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாம் விழிப்புடன் இருக்கின்றோம். அதிகாரத்தில் இருக்கும் அனைவரும் இத்தகையதொரு பேரழிவு யாருக்கும் ஏற்படாமல் தடுப்பதற்கு எப்போதுமே உச்சகட்ட முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி விதியின் 2267ஆம் பந்திக்கு பிரகாரம், மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றோம். ஏனெனில் அது மனித கண்ணியத்தை மீறுவதாகும். திருச்சபையின் போதனைகளுக்குள் எவ்வித மரண தண்டனையையும் விதிப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேவேளை, இலங்கை நீதித்துறையின் சுயாதீனத்தின் மீது நாம் முழு நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதையும், அதன் தீர்மானங்களிலோ அல்லது கலந்துரையாடல்களிலோ எந்த வகையிலும் தலையிடுவது இதன் நோக்கமல்ல என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றோம்.
கத்தோலிக்க திருச்சபை பழிவாங்குதலைத் தேடிச் செல்வதில்லை. புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் குறிப்பிட்டது போல, மன வேதனையையும் தனிப்பட்ட பழிவாங்குதலையும் தோற்கடித்து, எப்போதும் இதயப்பூர்வமாக மன்னிப்பு வழங்குவதற்கு மனிதர்கள் அழைக்கப்படுகிறார்கள். எனினும், சிவில் சமூகமும் சட்ட அமைப்புகளும், நிறுவப்பட்ட நீதிமன்றங்களின் ஊடாக பொது அமைதி, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும் என்றார்.





