தன் காதலியைக் கொலை செய்து விட்டு தப்பியோடிய இந்திய இளைஞர் ஒருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் கல்வி கற்கச் சென்ற இந்திய இளைஞர் ஒருவர், தன் காதலியைக் கொலை செய்துவிட்டு தப்பிச் செல்லும்போது ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட இந்திய இளைஞர்
வியாழக்கிழமை மாலை 4.00 மணியளவில், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலுள்ள Tucson நகரில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றிலிருந்து, தீயணைப்புத்துறையினருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.
அங்கு யாரோ ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் அவசர உதவிக்குழுவினர் அங்கு விரைய, அந்த வீட்டில் ஜுலிஸ்ஸா ரூபி சலஸார் (Julissa Rubi Salazar, 19) என்னும் இளம்பெண் உயிரிழந்துகிடந்தது தெரியவந்துள்ளது.

பொலிசார் மேற்கொண்ட ஆய்வில் ஜுலிஸ்ஸா கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.தொடர் விசாரணை ஜுலிஸ்ஸாவின் காதலரான வருண் பச்சிகரி (Varun Batchigari, 20) என்னும் இந்திய இளைஞரை கைகாட்ட, பொலிசார் அவரைத் தேடத் துவங்கியுள்ளனர்.
ஆனால், வருண் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்காக விமானம் ஏறிவிட்டது தெரியவந்துள்ளது.
உடனடியாக, அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, Tucson நகர பொலிசார், அங்குள்ள FBI அதிகாரிகள் மற்றும் ஜேர்மன் தலைநகரான பெர்லினிலுள்ள FBI அமைப்பு ஆகியோருடன் மூன்று குழுக்களாக இணைந்து வருணைப் பிடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
அதன்படி, இந்தியா செல்வதற்காக ஜேர்மனி சென்ற வருண் ஜேர்மனியில் கால் வைத்ததும், அங்கு தயாராக காத்திருந்த அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர்.
ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட வருண், அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட உள்ளார்.
வருண் ஜூலிஸ்ஸாவை தாக்கும் வழக்கம் கொண்டவர் என்பது சாட்சியங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தன்னை மீண்டும் மீண்டும் தாக்கியதுடன், மோசமாகவும் நடத்தியதால் வருணைப் பிரிய முடிவு செய்துள்ளார் ஜுலிஸ்ஸா.
ஆத்திரமடைந்த வருண் ஜுலிஸ்ஸாவைக் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டதாக கருதப்படுகிறது.





