மாகாண சபைத் தேர்தல் தடைகள் குறித்து சட்ட மா அதிபர் திணைக்கள அறிக்கை

2017 மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இரண்டு தீர்ப்புக்கள், மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள தடைகள் மற்றும் அவற்றைத் தீர்க்கக் கிடைக்கக்கூடிய சட்ட விதிகள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் விசேட செயற்குழுவுக்கு  எதிர்வரும் புதன்கிழமை (06) அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

அதேபோல் எல்லை நிர்ணய சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வு குறித்து ஆராய்வதற்கு எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அதிகாரிகள்  அன்றைய தினம்  குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து ஆராயந்து யோசனை மற்றும் விதப்புரைகளை முன்வைப்பதற்கான பாராளுமன்ற விசேட செயற்குழு  எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் குழு அறை 08இல் கூடவுள்ளது.

கடந்த 07 ஆம் திகதி இடம்பெற்ற குழுக்கூட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையாகி மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து தெளிவுப்படுத்தினர்.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கத்தால் முன்வைக்கப்பட்ட தனியார் உறுப்பினர் சட்டமூலத்தில் முன்னைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ  முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தல்கள் சட்டம் திருத்தப்பட்டு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின் ஏற்படுகளுக்கு அமைய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வட்டார எல்லைகளை தீர்மானிக்கும் நடைமுறை இதுவரையில் பூர்த்திசெய்யப்படாமையால் உருவாகியுள்ள சட்டரீதியான தடையின் காரணமாக மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வட்டார எல்லை நிர்ணய அறிக்கைக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்காமையால் குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கையாக சபாநாயகரினால் பிரதமரின் தலைமையில் ஐவரைக் கொண்ட மீளாய்வுக் குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும்இ இந்தக் குழுவின் அறிக்கை இரண்டு மாதங்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற போதும்  அவ்வாறானதொரு அறிக்கை கையளிக்கப்படவில்லையென தேர்தல்கள்  ஆணைக்குழுவின்  அதிகாரிகள் இக்குழுவில் தெரிவித்தனர்.

இதற்கு அமைய சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய மாகாணசபைத் தேர்தல் நடைமுறையைத் தொடர்வதற்குத் தேவையான விதிகள் எதுவும் இல்லை  என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் விடயங்களை முன்வைத்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் உறுப்பினர்கள் மாகாணசபைத் தேர்தல் தொடர்பான அடிப்படைச் சட்டத்தை மீண்டும் இயற்றுவதன் மூலம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வினவினர்.

2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலத்தை இரத்துச் செய்து மீண்டும் அடிப்படைச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என சட்டமா அதிபர்  திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

குறித்த சட்டத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான திருத்தம் உள்ளடக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கத்தால் முன்வைக்கப்பட்ட தனியார் உறுப்பினர் சட்டமூலத்தில் முன்னைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ  முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் முன்வைத்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு குழுவின் தலைவர் விஜித்த ஹேரத், 2017 மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இரண்டு தீர்ப்புக்கள்இ  மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள தடைகள் மற்றும் அவற்றைத் தீர்க்கக் கிடைக்கக்கூடிய சட்ட விதிகள் குறித்து ஒரு அறிக்கையைத் தயாரித்து குழுவிடம் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதற்கமைய குறித்து அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களம் கடந்த 20 ஆம் திகதி  கூடவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணிகளால் அன்றைய தினம் குழு கூடவில்லை. இவ்வாறான நிலையில் எதிர்வரும் புதன்கிழமை குழு மீண்டும் கூடவுள்ளது.

பழைய விகிதாசார  தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை இம்முறை நடத்துமாறும் அதற்கு பின்னர் தேர்தல் முறைமை குறித்து உறுதியான தீர்மானத்தை எடுக்கலாம் என்றும் குழுவின் உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் இராசமாணிக்கம், நிசாம் காரியப்பர் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.