முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான 4 வழக்குகளின் தீர்ப்பு இன்று!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு வழக்குகளின் தீர்ப்புக்கள் இன்று (26) செவ்வாய்க்கிழமை  பிரகடனப்படுத்தப்படவுள்ளன.

கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி இந்த வழக்குகளின் தீர்ப்புக்களை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் பிரகடனப்படுத்தவிருந்தார்.

இருப்பினும், இந்த வழக்குகளின் தீர்ப்புக்கள் 26ஆம் திகதி பிரகடனப்படுத்தப்படும் என நீதிபதி அன்றைய தினம் அறிவித்திருந்தார்.

2006ஆம் ஆண்டு தேசிய லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய போது, அச்சபைக்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதில் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த நான்கு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.