நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்திடம் உள்ளதே தவிர நிதியமைச்சிடமோ, திறைசேரியின் செயலாளரிடமோ அல்ல.மோசடி செய்யப்பட்ட 2.5 மில்லியன் டொலர் தொடர்பில் திறைசேரியின் செயலாளர் முறையாக பதிலளிக்கவில்லையென அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
அவுஸ்ரேலிய கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட விடயம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
அவுஸ்ரேலிய கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட விடயத்தை அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் பார்க்க வேண்டும்.
அரச கடன் முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட அரச கடன் முகாமைத்துவ அலுவலகத்துக்கு போதுமான தொழில்நுட்ப அனுபவங்கள் காணப்பட்டதா என்ற சந்தேகம் காணப்படுகிறது. சைபர் தாக்குதல்கள் உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நாடு என்ற ரீதியில் நாம் இதனை எதிர்கொள்ள வேண்டும்.
இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் நிகழாமல் இருப்பதற்குரிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்திடம் உள்ளதே தவிர நிதியமைச்சிடமோ, திறைசேரியின் செயலாளரிடமோ அல்ல.மோசடி செய்யப்பட்ட 2.5 மில்லியன் டொலர் தொடர்பில் திறைசேரியின் செயலாளர் முறையாக பதிலளிக்கவில்லை.
நிதி மோசடி குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் விரிவாக கலந்துரையாடி திறைசேரியின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளோம். இந்த விடயம் குறித்து எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் விசேட கூற்றை முன்வைக்க தீர்மானித்துள்ளேன் என்றார்.





