யானை – மனித மோதல் : அநுராதபுரம் மாவட்டத்தில் 18 பேர் மற்றும் 41 காட்டுயானைகள் உயிரிழப்பு

யானை – மனித மோதல் காரணமாக இதுவரை அநுராதபுரம் மாவட்டத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 41 காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அநுராதபுரம் வலய பணிப்பாளர் சந்ரசிறி தெரிவித்தார்.

மாவட்டத்தின் தற்போதைய நிலைமை குறித்து வனஜீவராசிகள் திணைக்கள அநுராதபுரம் வலய பணிப்பாளர் அவர்களை தொடர்புகொண்டு வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பணிப்பாளர் மேலும் கூறுகையில்,

இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான காலப் பகுதியிலேயே யானை – மனித மோதல் காரணமாக 18 பேர் பலியாகியுள்ளதுடன் பல்வேறு மனித செயற்பாடுகள் காரணமாக 41 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தின் மதவாச்சி, மஹவிளச்சிய ஹொரவபொத்தான மற்றும் தலாவ, கெக்கிராவ பகுதிகளிலேயே யானை மனித மோதல் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளது.

அத்துடன் தலாவ பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகளவான மனித உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளமை தெரிய வந்துள்ளது.

மே, ஜூன், ஜூலை மாதங்களிலேயே யானை மனித மோதல் கூடுதலாக இடம்பெற்றுள்ளதுடன் மனித உயிரிழப்பு மற்றும் யானை மரணங்களும் இடம்பெற்றுள்ளது.

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக காட்டுயானைகள் உணவு, நீர் தேடி படையெடுப்பதனால் இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதால் பொதுமக்கள் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.