வடக்கு, கிழக்கு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வேண்டும்!

வடக்கு, கிழக்கு மாகாண விவசாயிகள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வு வழங்கவேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

இன்று (6) பாராளுமன்றத்தில் இவ்வாறு கூறிய சாணக்கியன், தீர்வு வழங்காவிட்டால், அரசாங்கத்துக்கு எதிராக  விவசாயிகள் மீண்டும் வீதிக்கு இறங்குவார்கள். நாங்கள் அந்த போராட்டத்துக்கு ஆதரவளிப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2025ஆம் ஆண்டு  நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட   டித்வா   புயல்  அனர்த்தம்  காரணமாக இலங்கையின் உள்நாட்டு உணவு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தேசிய அரிசி உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு பங்களிப்பை வழங்கும் 2025 மற்றும்  2026 ஆண்டுகால  பெரும் போகச் செய்கை  அதன் ஆரம்பக் கட்டத்திலேயே இந்த இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டது.

ஒவ்வொரு பெரும் போகத்திலும் பொதுவாக 800, 000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையின்படி இம்முறை 603,960 ஹெக்டேயரில் மாத்திரமே பயிர்ச் செய்கை செய்யப்பட்டுள்ளது.

இதில் பெரும் பகுதி அதிக மழை வீழ்ச்சி, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக அழிவடைந்துள்ளது. தேயிலை, தென்னை, பழவகைகள் மற்றும் வீட்டுத் தோட்டப் பயிர்கள் உள்ளிட்ட ஏனைய வருடாந்த பயிர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர் அழிவினால் விவசாயிகளின் பணப்புழக்கம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2026 சிறு போகச் செய்கை ஆரம்பமாகவுள்ளதால், விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரிடம் பின்வரும் கேள்விகளை கேட்கிறேன்.

2025 / 2026  பெரும் போக நெல் உற்பத்தி தொடர்பில் அரசாங்கத்தின் தற்போதைய மதிப்பீடு எத்தனை மெட்ரிக் தொன்களாகும்? அத்துடன் 2006 ஆம் ஆண்டில் தேசிய மட்டத்தில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதா?

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக இதுவரையில் ஒதுக்கப்பட்ட மற்றும் விநியோகிக்கப்பட்ட நிவாரணப் பொதிகள் (மறு நடுகைக்கான நெல் விதைகள், உரம், நடுகைப் பொருட்கள்,சலுகைக் கடன்கள் மற்றும் இழப்பீடுகள் உட்பட) மாவட்ட ரீதியாகவும் விநியோகிக்கப்பட்ட பெறுமதி ரீதியாகவும் வகைப்படுத்திக் காட்டப்படுமா?

குறிப்பாக வடக்கு,  கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் குறித்து அவதானம் செலுத்தி,பிரதான நீர்த்தேக்கங்களிலிருந்து நீர்ப்பாசன நீரை விடுவித்தல், சான்றளிக்கப்பட்ட நெல் விதைகளை வழங்கல் மற்றும் உரம் விநியோகம் உட்பட 2026 சிறு போகச் செய்கையினை உரிய காலத்தில் உறுதிப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நடவடிக்கைகள் யாவை?

சில மாவட்டங்களில் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும் விவசாய சேவை நிலையங்களுக்கு இதுவரை போதுமான அளவு அல்லது உரிய நேரத்தில் உரம் கிடைக்கவில்லை. மணல் கலந்த மண் என்பதால் ஒரு ஏக்கருக்கு குறைந்தது 100 கிலோ கிராம் யூரியா தேவைப்படும் நிலையில், உரம் வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ள  நிறுவனம் மற்றும் அரசாங்க உரக் கூட்டுத்தாபனம் விநியோகத்தைத் தாமதப்படுத்துவதால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்கப்படுமா?