வாக்குமூலம் அளித்துவிட்டு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார் ரோஹித ராஜபக்‌ஷ!

பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று வியாழக்கிழமை  (25) காலை வருகை தந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ, பல மணிநேர வாக்குமூலத்தின் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

மிரிஹான மற்றும் நுகேகொடை பகுதிகளில் அமைந்துள்ள இரண்டு தனியார் நிறுவனங்களில் 19 மில்லியன் ரூபா  நிதியை முதலீடு செய்தமை தொடர்பான விவகாரத்திலேயே அவரிடம் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த 19 மில்லியன் ரூபா தொகையானது 2018ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வித நிரந்தர தொழிலோ அல்லது வருமான வழிமுறையோ இல்லாத ஒரு நபர், எவ்வாறு இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார் என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளதாகத் தெரிவித்து, நபர் ஒருவரால் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைத்த இந்த முறைப்பாடு மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப்  பிரிவினால் மாற்றப்பட்டது.

இதனடிப்படையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கீழ் இயங்கும் சட்டவிரோத சொத்துக்கள் விபரிப்புப் பிரிவு  இந்த முதலீடு தொடர்பான அடுத்தகட்ட தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.