வியாபாரி ஒருவரிடமிருந்து 15ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக உறுதிப்படுத்தப்பட்ட தொழில் துறை உத்தியோகத்தருக்கு ஒருவருக்கு, தலா 6 வருட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹப்புத்தளை மாவட்ட தொழில் துறை அலுவலகத்தில் தொழில் துறை உத்தியோகத்தராக கடமையாற்றியவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெல்லவாய, வீரசேகரகம பிரதேசத்தில் கோழிப்பண்ணை ஒன்றை நடத்திவரும் வர்த்தகர் ஒருவரிடம், தொழிலாளர் திணைக்களம் சார்ந்த விடயம் ஒன்றினைச் சாதகமாகச் செய்து கொடுப்பதற்காக சந்தேகநபர் 15 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரியுள்ளார்.
இது தொடர்பில் 2009 செப்டம்பர் 2 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வமான முறைப்பாட்டிற்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை கொழும்பு மேல் நீதிமன்ற இலக்கம் 6 இல், மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது முன்வைக்கப்பட்ட அனைத்து சாட்சியங்களையும் பரிசீலித்த நீதிபதி, பிரதிவாதிக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானித்து கடந்த 23 ஆம் திகதி தீர்ப்பளித்தார்.
இதன்படி, பிரதிவாதிக்கு மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், இத்தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
அத்துடன் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 5 ஆயிரம் ரூபா வீதம் தண்டப்பணம் விதித்த நீதிபதி, இலஞ்சமாகப் பெற்ற 15,ஆயிர்ம் ரூபாத் தொகைக்கு நிகரான மேலதிக அபராதத் தொகையையும் செலுத்துமாறு உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் உதவிப் பணிப்பாளர் நாயகம் தனுஜா பண்டார முன்னிலையாகி வழக்கினை வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது




