இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சூரிச் நோக்கிப் புறப்படவிருந்த சுவிஸ் ஏர் விமானத்தின் எஞ்சின் திடீரெனத் தீப்பிடித்துள்ளது. விமானியின் துரித நடவடிக்கையால் 232 பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
புது டெல்லியிலிருந்து சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்குப் புறப்பட்ட ‘LX147’ என்ற சுவிஸ் ஏர் விமானம் ஓடுதளத்தில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விமானம் தரையிலிருந்து எழும்ப முயன்ற தருணத்தில், அதன் இடது பக்க எஞ்சின் திடீரென செயலிழந்து தீப்பிடித்துள்ளது.
விமானத்தின் இடது புறத்தில் கரும்புகை வெளியேறியதுடன், வலது பக்க தரைப்பக்க சக்கரங்களுக்கு அருகிலும் தீ காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தை உணர்ந்த விமானி, உடனடியாகத் தரைக்கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்து, விமானத்தை ஓடுதளத்திலேயே அவசரமாக நிறுத்தியுள்ளார்.
விமானத்திற்குள் புகை சூழ்ந்ததால் பயணிகள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது. உடனடியாக அவசரக் கால சறுக்குப்பாதைகள் மூலம் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விமானத்தில் 228 பயணிகள் மற்றும் 4 பச்சிளம் குழந்தைகள் இருந்துள்ளனர்.
அவசரமாக வெளியேறும் முயற்சியில் 06 பயணிகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனையோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தின் 28-வது ஓடுதளம் நீண்ட நேரம் முடக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் பரபரப்பான இந்த விமான நிலையத்தில் பல விமானச் சேவைகள் தாமதமடைந்தன. எனினும், பாதுகாப்பு நெறிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விபத்து குறித்து சுவிஸ் ஏர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
“இந்தச் சம்பவம் கவலையளிக்கிறது. பயணிகளுக்குத் தேவையான ஹோட்டல் வசதிகள் மற்றும் மாற்று விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எஞ்சின் தீப்பிடித்ததற்கான தொழில்நுட்பக் காரணங்களைக் கண்டறிய சுவிட்சர்லாந்திலிருந்து நிபுணர் குழுவினர் தில்லிக்கு விரைந்துள்ளனர்.”
விமானி சரியான நேரத்தில் விமானத்தை நிறுத்தியதால், நூற்றுக்கணக்கான உயிர்கள் காக்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.




