30 வருடங்கள் நீடித்த யுத்தம் இனியும் தேவையில்லை – கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு

கிழக்கு மாகாண மக்கள் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.  30 வருடங்கள் நீடித்த யுத்தம் இனியும் தேவையில்லை  என்று அம்மாகாண  ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர தெரிவித்தார்.

நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் வெள்ளிக்கிழமை (22) கலந்துகொண்டு உரையாற்றும் போதே  அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

24 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த இந்தத் திட்டம் நிறைவு பெறாத நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்களில் இந்தத் திட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது பாரிய வெற்றியாகும்.

மட்டக்களப்பு நூலக திறப்பு விழாவில் ஜனாதிபதி குறிப்பிட்டது போன்று இந்த அரசாங்கம் இன,மத பேதமின்றி செயற்படும் அரசாங்கமாகும். இந்த கலாசார மண்டபத்தின் ஊடாக இன,மத பேதமின்றி மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கான அடித்தளம் இடப்படுகிறது.

30 வருடங்கள் நீடித்த யுத்தம் இனியும் தேவையில்லை. கிழக்கு மாகாண மக்கள் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையின் ஊடாக இந்த நாட்டை மேலும் முன்னேற்றலாம்.அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.