நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட சுமார் 304 கிலோ கிராம் ஹெரோயின் உள்ளிட்ட பல்வேறு வகை போதைப்பொருள் திங்கட்கிழமை (27ஆம் திகதி) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தகனம் செய்வதற்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
பலப்பிட்டிய மற்றும் சிலாபம் ஆகிய நீதிமன்றங்களில் இடம்பெற்று வந்த வழக்கு விசாரணைகள் நிறைவுக்கு வந்ததையடுத்து, சான்றுப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருட்களை அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய ஹெரோயின் 22 கிலோகிராம் 888 கிராம், கேரள கஞ்சா 33 கிலோகிராம் 172 கிராம் மற்றும் கஞ்சா 247 கிலோகிராம் 940 கிராம் என 304 கிலோ கிராம் போதைப்பொருள் இன்றைய தினம் தகனம் செய்யப்பட உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (26) காலை 9.00 மணியளவில் புத்தளம், வனாத்தவில்லு – லெக்டோவத்தை பகுதியில் அமைந்துள்ள தகன உலையில் வைத்து இவை எரியூட்டப்பட உள்ளன. இதற்காக குறித்த போதைப்பொருள் பொதிகள் இன்று அதிகாலை 5.00 மணிக்கு பலப்பிட்டிய நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்தும், காலை 7.30 மணிக்கு சிலாபம் நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்தும் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




