கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவன நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் என்.எல்.சி.2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக விளைநிலங்கள் அழிக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் என்.எல்.சி. அனல்மின் நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் கிராம மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றசாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. பூவுலக நண்பர்கள் மற்றும் மந்தன் அத்யாயன் கேந்திரா சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அனல்மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் அதிக அளவு பாதரசம், செலினியம் மற்றும் புளோரைடு இருப்பது தெரியவந்தது.
வடக்கு வேலூர் தொல்காப்பியர் நகரில் உள்ள ஒரு ஆழ்துளை கிணறு நீரில் பாதரசத்தின் அளவு அனுமதிக்கபட்ட வரம்பை விட 250 மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்தது. அதே கிராமத்தில் குடிநீரில் அதிகஅளவு கொந்தளிப்பு மற்றும் செலினியம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதன் விளைவாக பொதுமக்களுக்கு சீறுநீரக பிரச்சனைகள், சுவாச மற்றும் தோல் பிரச்சனைகள் ஏற்படுவது தெரியவந்தது. மேலும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது. நிலக்கரி தூசி மற்றும் சாம்பலின் மாசுபாடுகள் வீடுகளில் இருப்பதை ஆய்வு கண்டிறியப்பட்டுள்ளது. கரிக்குப்ப கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் மாசுபடுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
நிலக்கரி சுரங்கங்களில் இருந்து கழிவுகளை வெளியேற்றவும் உள்ளுர் நீர்நிலைகளில் சாம்பலை கொட்டுவதை நிறுத்தவும் சாம்பலை எடுத்து செல்லும் ஓடைகளை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. என்.எல்.சி. பகுதிகளில் குடியிருப்போருக்கு வருடத்திற்கு 2 முறை இலவச சுகாராத முகாம் நடத்த வேண்டும்.
சுகாதார பிரச்சனைகள் உள்ள கிராமங்களை என்.எல்.சி. பொதுமருத்துவமனை கண்காணிக்க வேண்டும். நிலக்கரி தூசி மாசுபாடுகளை தடுக்க சுரங்கத்தை சுற்றி பசுமை பட்டையை உருவாக்க வேண்டும் எனவும் ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளது.
மனித நேய மக்கள் கட்சி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா, மண் வாழ்வியலாளர் சுல்தான் இஸ்மாயில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.