ஆதி திராவிடர் நலத் துறையின் பெயரை சமூக நீதித் துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறித்து தமிழக சமூக நீதித் துறை அமைச்சரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான வன்னி அரசு பதில் அளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகம் முழுவதும் சமூக நீதித் துறைக்கு உட்பட்ட விடுதிகளில் மின்தடை ஏற்பட்டால் இன்வெர்ட்டர் வழங்கவும், மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஆதி திராவிடர் நலத் துறையின் பெயரை சமூக நீதித் துறை என பெயர் மாற்றம் செய்தது வருத்தமளிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். எங்களுடைய தலைவரின் நிலைப்பாடுதான் என்னுடைய நிலைப்பாடும்.
பள்ளிகளில் வழங்கப்படும் டைரிகளில் சாதி பெயர் கேட்கப்படுவது குறித்து தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஏற்கெனவே கூறியுள்ளார். சாதி தொடர்பான அணுகுமுறை, பாகுபாடு இருக்கக் கூடாது. அந்த அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம்.
கோவையில் அம்பேத்கர் சிலை விரைவில் நிறுவப்படும். இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக பெயர் விவரம் சேகரிக்கப்படுகிறது. விரைவில் விடுதலை இருக்கும்.
இரட்டை குவளை முறை எங்காவது இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பழங்குடி மக்களின் வாழ்வாதாரம், அவர்களின் தேவைகள், கோரிக்கைகள் குறித்து மலைப்பகுதிக்கு சென்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்” என்றார்.
விசிக மீது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம் வைப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அண்ணன் வைகோவை எப்பொழுதும் நேசிக்க கூடியவர்கள் நாங்கள். அவர் எந்த விமர்சனம், அவதூறு பரப்பினாலும் அவரை நாங்கள் நேசித்துக் கொண்டிருப்போம்” என்றார்.





