சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார்: தலைவர்கள் இரங்கல்

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பூமணி சென்னையில் காலமானார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

மேலும், பூமணி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான பூமணி (79) சென்னையில் நேற்று முன்தினம் இரவு உடல்நலக்குறைவால் காலமானார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டியை சேர்ந்த இவர், 1947-ம் ஆண்டு மே 12-ம் தேதி பிறந்தார். இவருடைய மனைவி செல்லம், மூத்த மகன் சிபி, இளைய மகன் ரவி மற்றும் மகள் கவிதா ஆகியோர் உள்ளனர்.

எதார்த்த படைப்புகள்

கரிசல் மண் மக்களின் வாழ்வியல், சமூக உறவுகள், சாதி அமைப்பு, உழைப்பாளர்களின் வாழ்க்கை உள்ளிட்டவற்றை எதார்த்தமாக தனது படைப்புகளில் பதிவு செய்தவர்.

இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிலும், வாசகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் நாவல் மற்றும் சிறுகதை உலகில் சிறப்பான தடம் பதித்த பூமணி, இலக்கியத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல்வேறு சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார்.

சாகித்ய அகாடமி விருது

இவர் எழுதிய ‘அஞ்ஞாடி’ என்ற நாவலுக்காக 2014-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது இவருக்கு அறிவிக்கப்பட்டது. மேலும் 1982-ல் வெளியான இவரது ‘வெக்கை’ நாவல், வெற்றி மாறனின் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படமாக வெளிவந்தது. இதேபோல், வாய்க்கால், வரப்புகள் போன்ற நாவல்கள் அவரது எழுத்தில் புகழ் பெற்றவை.

எழுத்தாளர் பூமணியின் உடல் அவரது சொந்த ஊரில் இன்று மதியம் 1.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

முதல்வர் இரங்கல்

எழுத்தாளர் பூமணி மறைவுக்கு முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது:

முதல்வர் விஜய்: பூமணியின் கரிசல் நிலத்தின் மண் வாசனையும், அடித்தட்டு மக்களின் வாழ்வின் நுட்பமான எதார்த்தங்களும், வரலாற்றின் ஆழமான சாட்சியங்களும் நிரம்பிய படைப்புகளின் மூலம் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்திய முக்கியமான படைப்பாளி ஆவார்.

அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இலக்கியத் துறையில் பூமணியின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: கரிசல்காட்டு மக்களின் வாழ்க்கையையும் சமூகத்தில் நிலவிய கட்டமைப்புகளையும் மிக எளிமையான மொழியில் வெளிப்படுத்திய படைப்பாளராக பூமணி திகழ்ந்தார்.