முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து, உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை நிறுத்தி வைக்கக் கோரி மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் கூறியிருந்ததாவது: விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர், ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடையவர் பேரறிவாளன். அவரை கருணை அடிப்படையில் உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளதே தவிர, குற்றமற்றவர் என்று அல்ல.
எனவே, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் கடந்த ஏப்.24 அன்று வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட பேரறிவாளனின் பதிவை நிறுத்தி வைத்து, பதிவை ரத்து செய்யவும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி, என்.செந்தில்குமார் அமர்வு, எதிர் மனுதாரர்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தனர்.




