சட்டப்பேரவையை திரையரங்கமாக மாற்றாமல், மக்கள் அரங்கமாக நடத்த வேண்டும் என முதல்வருக்கு தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஜனநாயகம், கருத்து சுதந்திரம் குறித்துப் பேச காங்கிரஸ் கட்சிக்கு எந்த உரிமையும் கிடையாது.
இந்திய அளவில் 84 முறை ஆளுநர் ஆட்சியை அமல்படுத்திய கட்சி காங்கிரஸ். தமிழகத்திலேயே திமுக, அதிமுக ஆட்சிகள் கலைக்கப்பட்ட வரலாறு உண்டு. தற்போது வேலைவாய்ப்பு குறித்து பேசும் காங்கிரஸ், உண்மைகளை மறைத்து நாடகமாடுகிறது.
பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 99,303 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இத்திட்டத்தில் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு 6 மாதங்களுக்குப் பிறகு ரூ.7,500, மீண்டும் 6 மாதம் கழித்து ரூ.7,500 என மொத்தம் ரூ.15 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. வேலை வழங்குபவர்களுக்கு, ஒரு பணியாளருக்காக மாதம் ரூ.3 ஆயிரம் பி.எஃப். தொகையாக வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு உதவித் தொகையாக ரூ.56.74 கோடியும், நிறுவனங்களுக்கு ரூ.187.67 கோடியும் பிரதமர் மோடியால் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒரு பருவத்தில் மட்டும் நாடு முழுவதும் 15 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. தமிழகத்தில் அவர்கள் தவெக கூட்டணி அரசில் அங்கம் வகிக்கின்றனர். ஆனால், தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் கிடைக்கவில்லை. இதற்காக காங்கிரஸ் குரல் கொடுக்காமல் இரட்டை வேடம் போடுகிறது. இதை மக்கள் நம்ப மாட்டார்கள்.
மத்திய அரசுடன் இணக்கமாக இருப்போம் என்று தமிழக முதல்வர் விஜய் கூறியிருப்பது ஆரோக்கியமான மனநிலை. இது வரவேற்கத்தக்கது. கோயில் நிதி கோயிலுக்கே பயன்படுத்தப்படும் என்று அரசு அறிவித்ததும் நல்ல விஷயம்.
அதே நேரம், திருப்பரங்குன்றத்தில் இந்துக்களின் உரிமை பறிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. அரசு திட்டங்கள் அனைத்தும் திட்டமிடப்படாமல் மேம்போக்காக நடக்கின்றன. இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். சட்டப்பேரவையை திரையரங்கமாக மாற்றாமல், மக்கள் அரங்கமாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.





