மதவாத பாஜக ஆட்சி நீடித்தால் பல மாநிலங்கள் தங்களின் உரிமையை இழந்துவிடக் கூடிய பேராபத்து உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக தொண்டர்களுக்கு, தமிழக முதல்வரும், திமுக தலைவருமாகிய முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,”மலைக்கோட்டை மாநகரில் காவிரிதான் கரை மீறிப் புரள்கிறதோ, கடல்தான் தமிழகத்தின் நடுப் பகுதியில் புகுந்துவிட்டதோ என்று மலைக்கின்ற அளவுக்கு தீரர் கோட்டமாம் திருச்சியில் நேற்று (ஜூலை 26) நடந்த டெல்டா மண்டலத்து வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டத்தில், 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா (I.N.D.I.A)வின் வெற்றிக்குக் கட்டியம் கூறிடும் வகையில் கழகத்தினர் திரண்டிருந்தனர்.
பயிற்சிக் கூட்டப் பந்தலில் மட்டுமா கூட்டம், திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கி, பயிற்சிக் கூட்டம் நடைபெற்ற ராம்ஜி நகர் வரை கழகத் தொண்டர்களும் பொதுமக்களும், காவிரியில் புதுவெள்ளம் பாய்ந்தது போன்ற உற்சாகத்துடன் திரண்டு நின்று வரவேற்பளித்தனர். அவர்களின் வாழ்த்தொலியில் உள்ளம் மகிழ்ந்தேன். பொன்னாடையும், புத்தகமும் வழங்கி அன்பை வெளிப்படுத்திய மக்களுக்கு நடுவே, கோரிக்கை மனுக்களுடன் இருந்தவர்களும் உண்டு. அவற்றை அக்கறையுடன் பெற்றுக் கொண்டேன்.
திராவிட மாடல் ஆட்சியில் முதல்வரைப் பயண வழியில்கூட, வாகனத்தை மறித்து சந்தித்து கோரிக்கை மனுவைத் தர முடியும் என்றும், உரிய வகையில் அது நிறைவேற்றப்படும் என்றும் தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ள நம்பிக்கையை செல்லும் இடங்களில் எல்லாம் காண்கிறேன். திருச்சியிலும் அதனைக் கண்டேன். மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடவே அல்லும் பகலும் உழைத்து வருகிறேன்.