மேற்காசியாவில் பல மாதங்களாகத் தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தாயாரிக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்த வரைபில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் புதிய திருத்தங்களைக் கோரியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானின் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை அகற்றுவது தொடர்பான விடயங்களிலேயே இந்தத் திருத்தங்கள் கோரப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது மேசையிலுள்ள புதிய ஒப்பந்த வரைபின்படி , இரு நாடுகளுக்கும் இடையே முதற்கட்டமாக 60 நாட்களுக்கு வன்முறைகளை முற்றாக நிறுத்துதல், சர்வதேச கப்பல் போக்குவரத்திற்காக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்துவிடுதல், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குதல், இந்த இராஜதந்திர நகர்வுகள் வெற்றிகரமாக முன்னேறினால், ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்பட்டு, சர்வதேச வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் பில்லியன் கணக்கான டொலர் நிதியை அவர்கள் அணுக அனுமதிக்கப்படும் ஆகிய முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
எனினும், “எமது நாட்டின் உரிமைகள் முழுமையாக உறுதிப்படுத்தப்படும் வரை எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் ஈரான் உடன்படாது” என ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாப் ஞாயிற்றுக்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 08 ஆம் திகதி போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது முதல், இரு நாடுகளும் ஒரு உடன்பாட்டை நெருங்கிவிட்டதாக ஜனாதிபதி ட்ரம்ப் கூறிவந்த போதிலும், இதுவரை உத்தியோகபூர்வ ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை. கடந்த வியாழக்கிழமை இரு நாட்டு அதிகாரிகளும் ஒரு ஆரம்பக்கட்ட புரிந்துணர்வு உடன்பாட்டை எட்டியிருந்தனர்.
ஆயினும், வெள்ளை மாளிகையின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் இந்த ஒப்பந்த வரைபில் 3 ஆவது முறையாக மேலும் சில திருத்தங்களை அவசரமாகக் கோரியுள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்காவிற்கு சாதகமான மற்றும் அவரது ‘சிவப்புக் கோடுகளை’ பூர்த்தி செய்யும் ஒப்பந்தத்தை மட்டுமே செய்வார். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
“ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது என்ற ஒரேயொரு உத்தரவாதம் எனக்குக் கண்டிப்பாகத் தேவை. அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்” என ஜனாதிபதி ட்ரம்ப் பாக்ஸ் நியூஸ் ஊடக நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், இந்த அமைதி ஒப்பந்தம் ஜனாதிபதி ட்ரம்பின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறினால், ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கப்படும் என அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்காக அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள தங்களது ஆயுதக் கிடங்குகள் முழுமையாகத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம், அமெரிக்காவின் இந்த கருத்துக்களை ஈரான் நிராகரித்துள்ளது. “இறுதி முடிவு எட்டப்படும் வரை கூறப்படும் அனைத்தும் வெறும் ஊகங்களே” என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். மேலும், அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தை முன்னகற வேண்டுமாயின், முடக்கப்பட்டுள்ள தங்களது பில்லியன் டொலர் நிதியை அமெரிக்கா முதலில் விடுவிக்க வேண்டும் என ஈரான் பிடிவாதம் பிடித்து வருகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த உயர்நிலை அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பாகிஸ்தான் நாடு இடைத்தரகராகச் செயற்பட்டு நடுநிலை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




