அமெரிக்க பாராளுமன்றத்தின் அனுமதியின்றி, ஈரானுக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தடுக்கும் வகையிலான விசேட தீர்மானம் ஒன்று அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்காசியாவில் அமெரிக்கா – ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள தற்போதைய சூழலில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் போர்க்கால அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இத்தீர்மானம் அவரது நிர்வாகத்திற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இத்தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட இத்தீர்மானம், 215க்கு 208 (215-208) என்ற மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் நூலிழையில் அங்கீகரிக்கப்பட்டது.
ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகக் கொள்கைக்கு எதிரானதொரு அரிதான இருகட்சி கூட்டு எதிர்ப்பாக, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான தோமஸ் மாசி, பிரையன் பிட்ஸ்பாட்ரிக் , டாம் பாரெட் மற்றும் வாரன் டேவிட்சன் ஆகியோர் தங்களின் சொந்தக் கட்சிக்கு எதிராக, ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதற்கு முன்னர் கொண்டுவரப்பட்ட இதுபோன்ற முயற்சிகளைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்த ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜாரெட் கோல்டன் , இம்முறை இத்தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த பெப்ரவரி மாதம் ஈரானுடனான இராணுவ மோதல் ஆரம்பமானதில் இருந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் போர்க்கால அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்குக் பாராளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட நான்காவது முயற்சி இதுவாகும். முறையான பாராளுமன்ற அனுமதியின்றித் தொடரப்படும் இராணுவ நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு முரணானது என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும், இச்சட்டமூலம் சட்டமாக மாறுவதற்கு இன்னும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அதன்படி, இத்தீர்மானம் முழுமையாக நிறைவேற வேண்டுமாயின், குடியரசுக் கட்சியினரின் பெரும்பான்மை பலத்தைக் கொண்ட ‘செனட்’ சபையிலும் இது அங்கீகரிக்கப்பட வேண்டும்.
ஒருவேளை செனட் சபையிலும் இது நிறைவேற்றப்பட்டாலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது விசேட ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி இத்தீர்மானத்தை இரத்து செய்ய முடியும். அதனை முறியடித்து பாராளுமன்றத் தீர்மானத்தைச் சட்டமாக்க வேண்டுமாயின், அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு அவசியமாகும்.
மத்திய கிழக்கில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச இராஜதந்திர முயற்சிகள் ஒருபுறம் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
அண்மையில் இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிகப் போர்நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்ட போதிலும், கடந்த சில நாட்களாக இருதரப்பும் பரஸ்பரம் ஏவுகணைத் தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டுள்ளன. எனினும், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முன்னேறி வருவதாகவும், இந்த வார இறுதிக்குள் சுமுகமானதொரு உடன்பாடு எட்டப்படலாம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ள பின்னணியிலேயே இந்த பாராளுமன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.





