சீனாவில் ஒன்லைன் உணவு விநியோகத் துறையில் நிலவும் அதீத போட்டிக்கு மத்தியில், நுகர்வோரை ஏமாற்றி வந்த பல்லாயிரக்கணக்கான போலி உணவகங்களை சீன அதிகாரிகள் அதிரடியாகக் கண்டறிந்துள்ளனர்.
செயலிகளில் மட்டுமே உணவகங்களாகக் காட்சியளித்து, நிஜத்தில் எவ்விதக் கடைகளுமின்றி இயங்கிவந்த இந்த சட்டவிரோத விநியோகச் சங்கிலிக்கு எதிராக சீனா தற்போது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த போலி உணவகங்கள் செயலிகள் மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் உணவுக்கான ஓடர்களைப் பெற்று, அவற்றை மிகக் குறைந்த விலைக்கு உணவுகளைத் தயாரித்துத் தரும் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடம் ஒப்படைக்கின்றன.
இதன் மூலம் உணவுகளின் விலையைக் கணிசமாகக் குறைத்து, வாடிக்கையாளர்களைக் கவர்ந்து தங்களது இலாபத்தை இந்த நிறுவனங்கள் உச்சப்படுத்திக் கொள்கின்றன.
இவ்வாறான மிகக் குறைந்த விலை உணவுகள், நுகர்வோரின் உணவுப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குவதாக அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு பீஜிங் நகரில் வசிக்கும் நபர் ஒருவர், ஒன்லைன் செயலி மூலம் ஓடர் செய்த கேக் ஒன்றில் சாப்பிட முடியாத பூக்கள் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்ததாக முறைப்பாடு அளித்துள்ளார். இந்த ஒற்றைப் முறைப்பாடே இந்த பிரம்மாண்ட மோசடி வலையமைப்பை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது.
விசாரணையில், அந்த கேக் நிறுவனம் இ-காமர்ஸ் தளங்களில் சுமார் 380 கிளைகளைக் கொண்டிருப்பதாகக் காட்டியிருந்த போதிலும், நிஜத்தில் அதற்கு ஒரு பௌதீகக் கடை கூட இல்லை என்பதும், அவை அனைத்தும் போலி உரிமங்களைப் பயன்படுத்தியதும் அம்பலமானது.
இதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சோதனைகளில், 7 முக்கிய உணவு விநியோகச் செயலிகளில் சுமார் 67,000 போலி உணவகங்களும், இரண்டு ஓடர் பரிமாற்ற தளங்களில் 3.6 மில்லியன் கேக் ஓடர்களும் பதிவாகியிருந்ததாக ‘சின்ஹுவா’ செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. வர்த்தகத்தை இழக்கக் கூடாது என்ற நோக்கில் பல ஒன்லைன் நிறுவனங்களும் இந்த மோசடிக்குத் துணையாக இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வாரத் தொடக்கம் முதல் சீனாவில் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, ஒன்லைன் உணவுச் செயலிகள் அனைத்தும் தங்களின் கீழ் இயங்கும் உணவகங்களின் உத்தியோகபூர்வ முகவரி மற்றும் உரிமங்களை கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.
கடந்த ஏப்ரல் மாதத்தில், சந்தை ஒழுங்குமுறைக்கான மாநில நிர்வாகம் இந்த போலி உணவக விவகாரம் தொடர்பாக 7 முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மொத்தமாக 3.6 பில்லியன் யுவான் (சுமார் 530 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அபராதம் விதித்து அதிரடி உத்தரவிட்டது.
இந்த அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தங்களின் உணவுப் பாதுகாப்பை நுகர்வோருக்கு நிரூபிக்க உணவகங்கள் புதிய உத்திகளைக் கையாண்டு வருகின்றன.
ஹாங்சோ நகரில் உள்ள 20 க்கும் மேற்பட்ட உணவு விற்பனை நிலையங்கள், தங்களது சமையலறைகளில் நேரடி ஒளிபரப்பு வசதியுடன் கூடிய ‘வெளிப்படையான சமையலறைகளை’ நிறுவியுள்ளன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் உணவு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை நேரலையாகப் பார்க்க முடியும்.
அன்ஹுய் மாகாணத்தில் உள்ள அதிகாரிகள் முக்கிய ஒன்லைன் நிறுவனங்களுடன் இணைந்து, சமையலறைகளைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அத்துடன், இவ்வாறான போலி உணவகங்கள் குறித்து இரகசியத் தகவல் வழங்கும் டெலிவரி ஊழியர்களுக்கு விசேட வெகுமதிகளை வழங்கவும் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளது.



