கைக்குழந்தைகளுக்கான முதல் மலேரியா மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்

சர்வதேச மலேரியா தினத்தை முன்னிட்டு, கைக்குழந்தைகளுக்காக விசேடமாக உருவாக்கப்பட்ட முதலாவது மலேரியா மருந்துக்கு  உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை (24)  அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மருந்து, 05 கிலோ கிராமிற்கும் குறைவான எடையுள்ள குழந்தைகளுக்குப் பாதுகாப்பான முதல் மலேரியா எதிர்ப்பு மருந்தாகும்.

குறித்த இந்த மருந்து ஆர்டிமெதர் மற்றும் லுமெஃபான்ட்ரின்ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரைகாலமும்  வளர்ந்த குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட மருந்துகளே கைக்குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த மருந்தின் கண்டுபிடிப்பு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

புதிய  இந்த மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளமை முழுமையான மருத்துவச் சோதனைகளை  நடத்தும் வசதியற்ற நாடுகளும் இந்த மருந்தை உத்தியோகபூர்வமாக உபயோகிக்க  அனுமதி கிடைத்துள்ளது.

அத்துடன்,  ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனங்கள் இந்த மருந்தைக் கொள்வனவு செய்து, மலேரியா அதிகம் பரவியுள்ள பகுதிகளுக்கு விநியோகிக்கவும் வழிவகுத்துள்ளது.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளே மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினராக உள்ளனர். நுளம்புளால் பரவும் இந்த நோய் தொடர்பான மொத்த மரணங்களில் சுமார் 70 சதவீதம் இவர்களிடமே நிகழ்கின்றன.

கர்ப்ப காலத்தில் மலேரியா பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் இது சுமார் 10,000 தாய்மார்களின் மரணம், 200,000 கருச்சிதைவுகள் மற்றும் சுமார் 550,000 குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறப்பதற்கு மலேரியா ஒரு முக்கிய காரணமாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகள சுட்டிகாட்டியுள்ளன.

2000-ஆம் ஆண்டிலிருந்து, உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளன. இதன் மூலம் சுமார் 14 மில்லியன் இறப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும்,  மலேரியா ஒரு பெரிய உலகளாவிய சுகாதார சவாலாகவே நீடிக்கிறது. 2024-ஆம் ஆண்டில் சுமார் 282 மில்லியன் பாதிப்புகளும், அரை மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளும் பதிவாகியுள்ளன.

உலகளவில் ஏற்படும் மலேரியா பாதிப்புகள் மற்றும் இறப்புகளில் பத்தில் ஒன்பது ஆபிக்க கண்டத்தில் துணை சஹாரா ஆபிரிக்க பிராந்தியத்தில் பதிவாகின்றன.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்,

பல நூற்றாண்டுகளாக, மலேரியா பெற்றோரிடமிருந்து குழந்தைகளையும், சமூகங்களிடமிருந்து ஆரோக்கியம், செல்வம் மற்றும் நம்பிக்கையையும் பறித்து வந்துள்ளது. ஆனால் இன்று, நிலைமை மாறி வருகிறது. புதிய தடுப்பூசிகள், நோயறிதல் சோதனைகள், அடுத்த தலைமுறை நுளம்பு வலைகள் மற்றும்  மிகச் சிறிய குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டவை உள்ளிட்ட செயல்திறன் மிக்க மருந்துகள், நிலைமையை மாற்ற உதவுகின்றன என  உலக சுகாதார அமைப்பின் தலைவர்  டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

மலேரியா ஒட்டுண்ணிகள் கண்டறிவதற்குக் கடினமாகும் வகையில் உருமாறியுள்ளதால், இந்த ஏப்ரல் மாத ஆரம்பத்தில் மூன்று புதிய விரைவுப் பரிசோதனைகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

‘ஆப்பிரிக்காவின் கொம்பு’ என்றழைக்கப்படும் சோமாலி தீபகற்பப் பகுதியில் உள்ள நாடுகளில், தவறான முடிவுகள் காரணமாக 80 சதவீத பாதிப்புகள் கண்டறியப்படாமல் போவதாகவும், இது சிகிச்சையைத் தாமதப்படுத்தி உயிரிழப்பு அபாயத்தை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2021 ஆம் ஆண்டில் முதலாவது மலேரியா தடுப்பூசியை  உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்திருந்ததுடன், அது ஆபிரிக்காவின் பல நாடுகளில் குழந்தைகளுக்குப் பரந்த அளவில் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.