சமீரா பாதுகாப்பாக இஸ்ரேலை விட்டு வெளியேறினார்!

காசா மீதான இஸ்ரேலின் கடற்படை முற்றுகையை உடைக்கும் நோக்கில் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்ட “குளோபல் ஸ்மூத் புளோட்டிலா” என்ற மனிதாபிமான உதவிப் பயணக் குழுவில் இணைந்திருந்த இலங்கைச் செயற்பாட்டாளர் சமீரா மெஹ்பூப்தீன் தற்போது பாதுகாப்பாக இஸ்ரேலில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீரா மெஹ்பூப்தீன் பாதுகாப்பாக இஸ்ரேலின் ரமோன் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து இஸ்தான்புல் நகருக்குச் செல்வதற்கான விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காசா முற்றுகையை மீற முயன்ற குற்றச்சாட்டில் இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சர்வதேச செயற்பாட்டாளர்களை இஸ்ரேல் தற்போது விடுவித்து நாடு கடத்தத் தொடங்கியுள்ளது.

பெரும்பாலான சர்வதேச செயற்பாட்டாளர்கள் தெற்கு இஸ்ரேலிய நகரமான எய்லாட்டிற்கு அருகிலுள்ள சிவில் விமான நிலையத்துக்கு மாற்றப்பட்டு நாடு கடத்தப்படுவதாக இஸ்ரேலை தளமாகக் கொண்ட சட்ட ஆலோசனைக் குழுவான ‘அடாலா’ தெரிவித்துள்ளது.

முன்னதாக, தடுத்து வைக்கப்பட்டுள்ள மனிதாபிமான செயற்பாட்டாளர்களை மனிதநேயமற்ற முறையில் நடத்துவது போன்ற காட்சிகளை இஸ்ரேலிய அமைச்சர் இடாமர் பென்-கிவிர் வெளியிட்டிருந்தமைக்கு, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கவலை தெரிவித்திருந்தது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதுக்குழுவினரின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் கண்ணியத்திற்கு உத்தரவாதம் அளிக்கவும், அவர்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் தாயகம் திருப்பி அனுப்பவும் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சுடன் தூதரகத்தின் ஊடாக இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

சமீரா மெஹ்பூப்தீனுடன் தொடர்பில் இருக்கும் வட்டாரங்களின்படி, அவர் பாதுகாப்பாக இஸ்ரேலின் ரமோன் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து இஸ்தான்புல் நகருக்குச் செல்வதற்கான விமானத்தில் புறப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் புறப்படுவதற்கு முன்பாக இலங்கை தூதரக அதிகாரிகள் அவரை சிறிது நேரம் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். அவரது உடல்நிலை குறித்து மட்டுமே கேட்கப்பட்ட ஒரே கேள்விக்கு, தான் நலமாக இருப்பதாக சமீரா பதிலளித்துள்ளார்.

அவர் உள்ளூர் நேரப்படி, மாலை 5:50 மணிக்கு இஸ்தான்புல் சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுவதுடன், தேவையான உதவிகளை வழங்குவதற்காக அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவின் மீதான இஸ்ரேலின் முற்றுகைக்கு சவால் விடும் வகையில் கிட்டத்தட்ட 100 நாடுகளைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் பங்கேற்ற இந்த சர்வதேச ஒற்றுமைப் பயணத்தில் இணைவதற்காக சமீரா மெஹ்பூப்தீன் கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையிலிருந்து புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.