ஜேர்மனியில் ஆளுங்கட்சியை பின்னுக்குத் தள்ளிய புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி

ஈரான் போர் பல்வேறு நாடுகளில் பல்வேறு வகையில் தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், ஜேர்மனியில் அது ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

ஆம், சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில், ஆளுங்கட்சிக்கு மக்கள் ஆதரவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது!

ஆளுங்கட்சியை பின்னுக்குத் தள்ளிய புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி

ZDF ஊடகம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பிரெட்ரிக் மெர்ஸின் தலைமையிலான ஆளும் CDU/CSU கூட்டணிக்கு மக்கள் ஆதரவு 25 சதவிகிதமாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. விடயம் என்னவென்றால், பலரும் அஞ்சும் புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான AfD கட்சி, மெல்ல முன்னேறி 26 சதவிகித ஆதரவைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

SPD கட்சிக்கும் ஆதரவு குறைந்து அக்கட்சிக்கு ஆதரவு 12 சதவிகிதமாகவும், கிரீன்ஸ் கட்சிக்கான ஆதரவும் குறைந்து அக்கட்சிக்கான மக்கள் ஆதரவு 14 சதவிகிதமாகவும் உள்ளது.

ஆளுங்கட்சி பின்னடைவை சந்திக்க, அக்கட்சி மீது மக்களுக்கு சலிப்பு அதிகரித்துவருவதே காரணமாக உள்ளது என்கின்றன ஆய்வு முடிவுகள்.

குறிப்பாக, ஈரான் போரால் எரிபொருட்கள் விலை அதிகரித்துவருவதை அரசால் சரியாக கையாள இயலவில்லை என மக்கள் கருதுகிறார்கள்.

எரிபொருள் விலை உயர்வை சமாளிக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை என மக்கள் கருதும் நிலையில், 81 சதவிகித மக்கள், மேலும் வலிமையான நடவடிக்கை தேவை என்றும் 57 சதவிகித மக்கள், மாற்று எரிசக்தி தொடர்பில் மேற்கொள்ளப்படும் மாற்றம் மிகமெதுவாக நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.