புலம்பெயர்வோரை கடத்த முயன்ற பிரித்தானியர்: பிரான்சில் சிறையிலடைப்பு

புலம்பெயர்வோர் சிலரை படகு மூலம் பிரித்தானியாவுக்குள் கடத்த முயன்ற பிரித்தானியர் ஒருவர் பிரான்சில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

ஸ்கொட்லாந்திலுள்ள கிளாஸ்கோ என்னுமிடத்தைச் சேர்ந்த ஜான் (John Frizell, 46) என்பவருடைய படகில், ஒரு மூன்று வயது சிறுமி உட்பட ஐந்து புலம்பெயர்ந்தோர் இருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் பிரான்சிலுள்ள நார்மாண்டியில் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.

 

அத்துடன், துறைமுகத்தின் அருகில் ஆறு பேர் இருந்துள்ளார்கள். அவர்கள் அந்தப் படகில் ஏறுவதற்காக காத்திருந்ததாக நம்பப்படுகிறது.

விசாரணையில், அவர்கள் படகில் பிரித்தானியாவுக்குப் பயணிப்பதற்காக ஆளுக்கு 1,000 யூரோக்கள் செலுத்தியதும் தெரியவந்தது.

மேலும், ஜானும், ஆண்ட்ரூ (Andrew Walsh) என்பவரும், பிரான்சிலிருந்து புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்கு அழைத்துவரும் நோக்கத்துடன் பிரான்சுக்கு பயணித்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து ஜானுக்கு இரண்டரையாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ரூவுக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆண்ட்ரூ மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டால் மட்டுமே சிறை செல்லும் வகையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இருவரும் பிரான்சுக்குள் நுழைய நிரந்தரத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.