யெமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் ; இஸ்ரேல் மீது புதிய போர் முனை

ஈரான் மீதான போர் ஆரம்பித்து நேற்றுடன் (28) ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அமெரிக்காவின் 82 ஆவது வான்வழிப் படைப்பிரிவு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மேலதிக துருப்புக்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தைச் சென்றடைந்துள்ளன. ஈரானுக்குள் தரைவழித் தாக்குதல்களை முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்க பென்டகன் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், யெமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் 24 மணித்தியாலங்களுக்குள் இஸ்ரேல் மீது இரண்டு முறை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ள நிலையில், ஹூதிகளின் இந்தத் தலையீடு செங்கடல் மற்றும் அரபிக்கடல் ஊடான சர்வதேச கப்பல் போக்குவரத்திற்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

“இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் தொடரும்” என ஹூதி இராணுவப் பேச்சாளர் யாஹ்யா ஸாரி  சவால் விடுத்துள்ளார்.

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ‘அல் மனர்’ தொலைக்காட்சியைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களை மீட்கச் சென்ற மீட்புப் பணியாளர்கள் மீதும் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியதில் மேலும் பலர் பலியாகியுள்ளனர். உளவுத் தகவல்களைச் சேகரித்ததாகக் கூறி இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நியாயப்படுத்தியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக உலக எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் உத்தரவாதத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியக் கொடிகளை ஏந்திய கப்பல்கள் மாத்திரம் தடையின்றிச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

மசகு எண்ணெய் விநியோகத் தடையால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் சஞ்சன் ஆகிய நகரங்களில் உள்ள உட்கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மீது இஸ்ரேல் குண்டுவீச்சுகளை நடத்தியுள்ளது.

இஸ்ரேலின் எஷ்டாவோல் கிராமம் மற்றும் பஹ்ரைனில் உள்ள அலுமினியத் தொழிற்சாலை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு, இந்தப் போருக்கு எதிராக அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு எதிராகப் பாரிய மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஈரானிய மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான காலக்கெடுவை மேலும் 10 நாட்களுக்கு அவர் நீடித்துள்ளார்.