பிரான்சு நாட்டில் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் 19/01/2025 ஞாயிறு காலை 11.00 மணிக்கு தமிழர்களின் மங்கள இசை நாதசுவரம் ஒலிக்க விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டு பொங்கல் நிகழ்வு நடைபெற்றது. பொங்கல் நிகழ்வினை தமிழீழ மக்களுடன் , தமிழ்நாடு மொரிசியசு, மலேசியா, பிரான்ஸ் மக்களும் இணைந்து பொங்கலிட்டனர்.
நகரபிதா,தொழில் அதிபர் கள்,தமிழ்ச்சோலை ஆசிரியர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்கள் மங்கல விளக்கினை ஏற்றிவைத்தனர். தமிழீழ விடுதலைப் போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு, பொதுமக்களுக்கும், நாட்டுப் பற்றாளர்களுக்கும் அகவணக்கம் செலுத்தி மாணவர்களால் தமிழ் மொழி வாழ்த்து இசைக்கப்பட்டு, வரவேற்பு பாடலுடன், வணக்க நடனம் நடைபெற்றது. வரவேற்புரையை ஐரோப்பிய தமிழர் ஒன்றியத் தலைவர் திரு. கிருபானந்தன் நடராசா அவர்கள் ஆற்றியிருந்தார்.
மழழையினரின் பண்பாட்டு உடையணிந்து வேடமிட்டு காட்சி படுத்தல், பாட்டு, பலூன் நடனம், மாவீரர் நடனம், காவடி, கவிதை, கதை, தாளலயம், கிராமிய நடனம், எழுச்சி நடனங்கள், பரதநடனம், கும்மி, கோலாட்டம், பேச்சு பாட்டு போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
சென்ற ஆண்டில் திருக்குறள்த் திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ், பதக்கம், திருவள்ளுவர் சிலை வழங்கி மதிப்பளித்ததோடு தமிழ்ச் சோலையில் அர்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்களும் தமிழ்மக்களுக்காக அறவழியில் போராடுவோரும் மதிப்பளிக்கப் பட்டனர்.
அத்துடன் தமிழ்ச் சோலையில் தமிழ் மொழி கல்வியில் 12 ஆண்டுகளை நிறைவு செய்த மாணவர்கள் பாராட்டி பதக்கமும் சான்றிதழும் வழங்கி மதிப்பளிக்கப் பட்டார்கள். காலை 10.00 மணி முதல் வந்திருந்த மக்கள் இரவு 7.00 மணிவரை இருந்து நிகழ்வுகளைச் சிறப்பித்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட பிள்ளைகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை 70 நினைவாக கேடயம் வழங்கப்பட்டது. நன்றியுரையுடன் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன், தமிழீழ மக்களின் தாரகமந்திரத்துடன் ஐரோப்பிய தமிழர் ஒன்றியம், மற்றும் தமிழ்ச்சோலையினதும் தமிழர் புத்தாண்டு நிகழ்வும் 32வது ஆண்டு நிகழ்வும் நிறைவு பெற்றது.






