பணிப்பாளர்கள் இன்றி மூன்று தேசிய வைத்தியசாலைகள் இயங்குவதாக தகவல்

சிறிலங்காவில் மூன்று வைத்தியசாலைகள் 08 மாதங்களுக்கும் அதிகமாக நிரந்தர பணிப்பாளர்கள் இன்றி இயங்கி வருவதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி,  கொழும்பில், கண்டி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலுள்ள தேசிய வைத்தியசாலைகள் பணிப்பாளர்கள் இன்றி இயங்கி வருகின்றன.

தற்போது, கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையை வைத்தியர் பிரதீப் விஜயசிங்க நிர்வகித்து வருகிறார், அவர் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார். வைத்தியர் விஜயசிங்க இரண்டு வைத்தியசாலைகளின் நிர்வாகத்தையும் ஒரே நேரத்தில் கையாண்டு வருகிறார்.

பிரதி பணிப்பாளர் ஆளுநர்  பதவிகளுக்கான நேர்காணல்கள் ஏற்கனவே நடத்தப்பட்டுவிட்டதாக சுகாதார பிரதி  அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜயமுனி ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

எனினும், பொது சேவை ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய நடைமுறை ஒன்று காரணமாக தீர்மானங்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய வைத்தியசாலைகள் சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக இந்த முக்கிய நிர்வாக பதவிகளுக்கான வெற்றிடங்கள் முன்னரே  நிரப்பப்பட்டிருக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.