ஈழத்தைச் சேர்ந்த கல்வியியலாளரும் பிரித்தானியாவின் லெஸ்டஷயர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தலைவர் மற்றும் உபவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா, உயர் கல்வித்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக 2026 ஆம் ஆண்டுக்கான பிரித்தானிய மன்னரின் அதியுயர் கௌரவப்பட்டமான ‘சேர்’ பட்டத்தைப் பெற்றுப் பெருமைசேர்த்துள்ளார்.
ஈழத்தில் பிறந்த நிஷான் கனகராஜா யாழ் பரி.யோவான் கல்லூரியின் பழைய மாணவராவார். இலங்கையில் தனது பாடசாலைக்கல்வியைப் பூர்த்திசெய்த அவர், பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது இளமாணி, முதுமாணி மற்றும் கலாநிதி பட்டப்படிப்புக்களை நிறைவுசெய்தார்.
அதனைத்தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு லெஸ்டஷயர் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக நியமிப்படுவதற்கு முன்னர் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட பதவிநிலை உள்ளடங்கலாக சுமார் 3 தசாப்தகாலமாக உயர்கல்வித்துறையில் பல்வேறு பதவிகளை வகித்தார்.
இந்நிலையில் பிரித்தானியாவில் உள்ள அதியுயர் பல்லினத்தன்மை வாய்ந்த பல்கலைக்கழகத்துக்குத் தலைமை தாங்குபவர் என்ற ரீதியில் உயர்கல்வித்துறைக்கான நிஷான் கனகராஜாவின் பங்களிப்புக்கான அங்கீகாரத்தை வழங்கும் வகையிலேயே இந்த அதியுயர் கௌரவப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இதனை போரினால் பாதிக்கப்பட்ட நிலத்திலிருந்து வந்த ஒருவனின் குறிப்பிட்டுக்கூறத்தக்கதோர் பயணம் என வர்ணித்திருக்கும் நிஷான் கனகராஜா, ஒருவனின் வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி கல்விக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.





