ஈரான்–இஸ்ரேல் போரால் அமெரிக்காவிற்கு பெரும் பொருளாதாரச் சுமை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்

ஈரான் மீதான போரின் காரணமாக அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள கடும் பொருளாதாரச் சுமைக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க பாராளுமன்றத்தில் உள்ள அவரது ஆதரவாளர்களே காரணம் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் தனது சமூக வலைதளப் பதிவில், வொஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டி இந்த கருத்துகளை முன்வைத்துள்ளார்.

அரக்ச்சி குறிப்பிட்டதாவது, ஈரானுக்கு எதிரான போருக்காக அமெரிக்க பாதுகாப்புத் துறை சுமார் 200 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கோரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது போரின் ஆரம்பக் கட்ட செலவாக மட்டுமே இருக்கலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். “இந்த விருப்பத் தேர்வு போர் தொடங்கி மூன்று வாரங்களே ஆகின்றன. இந்த 200 பில்லியன் டொலர் என்பது பனிப்பாறையின் நுனி மட்டுமே” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்க பொதுமக்கள் இந்த பெரும் செலவுக்காக “பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் காங்கிரஸில் உள்ள அவரது விசுவாசிகளுக்கு நன்றி சொல்லலாம்” எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்க தரப்பில் போர்ச் செலவு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான முழுமையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. ஆனால், போரின் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 11.3 பில்லியன் டொலர் செலவானதாக இராணுவ அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் மைக் ஜான்சன் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், போர் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் தற்போதைய நிலையில் மொத்த செலவைக் கணக்கிட முடியாது என தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவுகள் மற்றும் உள்நாட்டு பொருளாதார தாக்கங்கள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. நிலைமை மேலும் விரிவடையும் பட்சத்தில், சர்வதேச பொருளாதாரத்திலும் இதன் தாக்கம் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.