நீர்கொழும்பு நகருக்கு பேரழகு சேர்க்கும் பெருமை பெற்றது நீர்கொழும்பு களப்பு ஆகும். அது இயற்கையின் கொடையாகும்.
மேல்மாகாணத்தில் உள்ள ஒரே ஒரு களப்பாகவும், இலங்கையின் மிகப்பெரிய களப்பாகவும் இந்த களப்பு கருதப்படுகிறது.
இந்த களப்பு பகுதியில் 29 வகையான தாவர வகைகளும், ஆறு வகையான கடல்வாழ் உயிரினங்களும், ஏழு வகையான மீனினங்களும், நான்கு வகையான பறவை இனங்களும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
3.164 ஹெக்டேயர் பரப்பில் பரந்து விரிந்துள்ள நீர்கொழும்பு களப்பை அண்டியதாக 3500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக்குடும்பங்கள் களப்பை பிரதானமாகக் கொண்டே மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றன.
நீர்கொழும்பு களப்பானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாச பயணிகளை கவரும் இடமாகவும் உள்ளது. களப்பை சுற்றிப் பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கானோர் அன்றாடம் வருவதை காண முடியும். இதற்காக படகு சவாரி ஏற்பாடுகளும் உள்ளன.
இந்த நிலையில் இந்த களப்பு பல்வேறு காரணிகளால் அசுத்தமாகியுள்ளது.
பல்வேறு வியாபார நிலையங்கள், பல்வேறு நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் மற்றும் மக்களின் அலட்சியத்தால் களப்பில் கொட்டப்படும் கழிவுகள் காரணமாக களப்புக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அங்குள்ள தாவரங்கள் மற்றும் மீனினங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
3500 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் களப்பில் மீன்பிடித் துறையில் ஈடுபட்டுள்ளதுடன 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அவர்களை அண்டி வாழ்கின்றனர். களப்பு மாசடைவதன் காரணமாக மீனவர்கள் பாதிக்கப்படுவதுடன் அதன் இயற்கை அழகுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பல்வேறு அமைப்புகள் நல்ல நோக்கத்துடன் இந்த ஏரியைச் சுத்தம் செய்யும் திட்டங்களைத் அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றன.
நேற்று 19 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு சுற்றுலாப் படகு உரிமையாளர்கள் சங்கத்தால் இந்த களப்பினை சுத்தம் செய்யும் வேலைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அது பாராட்டப்பட வேண்டும்.
இந்த சிரமாதானத்தின் போது சிறிய படகுகளில் சென்று களப்பினில் சேர்ந்திருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. இதன் போது பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைக் கூலங்கள் அதிக அளவில் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன.















