ஓட்டிசம் விழிப்புணர்வுக்காக தனுஷ்கோடி–தலைமன்னார் கடல் வழியை நீந்தி சாதனை படைத்த சென்னை சிறுவர்கள்

ட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சென்னையைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள், தனுஷ்கோடி–தலைமன்னார் – தனுஷ்கோடி கடல் பாதையை நீந்தி சாதனை படைத்துள்ளனர்.

தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் பாக்கு நீரிணை பகுதி ஆழம் குறைவாகவும், பாறைகள் மற்றும் ஆபத்தான கடல் உயிரினங்கள் நிறைந்ததாகவும் கருதப்படுகிறது. இந்த கடல் வழியை பலர் முன்பும் நீந்தி கடந்திருந்தாலும், இருபுறமும் தொடர்ச்சியாக நீந்தி திரும்புவது அரிதான சாதனையாகும்.

சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ அஷ்வத் (11), லவ் (9), குஷ் (9), தன்வேஷ் (10) ஆகிய நான்கு சிறுவர்களும் ஓட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும், நீச்சலில் பயிற்சி பெற்று பல போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

தேவையான அனுமதிகள் பெறப்பட்ட நிலையில், அவர்கள் நேற்று முன்தினம் (18) சனிக்கிழமை பிற்பகல் 03.25 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையிலிருந்து ரிலே முறையில் நீந்தத் தொடங்கினர். சுமார் 17 கடல் மைல் தூரத்தை 9 மணி 5 நிமிடங்களில் கடந்து, இரவு 12.30 மணியளவில் தலைமன்னாரை அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து உடனடியாக மீண்டும் தனுஷ்கோடி நோக்கி நீந்தத் தொடங்கி, நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை  காலை 09.27 மணியளவில் ஆரம்பித்த இடத்தையே மீண்டும் சென்றடைந்தனர்.

மொத்தம் 34 கடல் மைல் தூரத்தை 18 மணி 2 நிமிடங்களில் நீந்தி கடந்த இந்த சாதனையின் மூலம், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களும் நீண்ட தூரம் மற்றும் நீண்ட நேரம் நீந்த முடியும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.

சாதனையை நிறைவு செய்த பின்னர், சிறுவர்கள் நால்வருக்கும் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.