ஈஸ்டர் தாக்குதல் குறித்து கருத்து வேறுபாடு : இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் !

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தை சிங்கள பௌத்தர்கள் மீது சுமத்துவதற்கு முயற்சிக்கப்படுகிறது. குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இராணுவ புலனாய்வு உள்ளது என்று  அருட்தந்தை சிறில் காமினி குறிப்பிட்டுள்ள கருத்து சிங்கள – கத்தோலிக்க இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என  பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை தேடி செல்லல் எனும் புத்தகத்தை செவ்வாய்க்கிழமை (21) கண்டி மல்வத்து பீட மகாநாயக்க தேரருக்கு கையளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பற்றி நான் எழுதிய புத்தகத்தில் பிரதான சூத்திரதாரி யார் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். குண்டுத்தாக்குதலை நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்ட இப்ராஹிம் நிதி வழங்கியுள்ளதை ஆதாரத்துடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பின்னணியில் இராணுவ புலனாய்வுப் பிரிவு இருப்பதாக கத்தோலிக்க சபையின் அருட்தந்தை சிறில் காமினி குறிப்பிட்டுள்ளமை கவனத்துக்குரியது.

குண்டுத்தாக்குதல் சம்பவத்தை சிங்கள பௌத்தர்கள் மீது சுமத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னணியில் நான் புத்தகம் எழுதி உண்மையை வெளிப்படுத்தினேன்.

எனது புத்தகம் மற்றும் அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆகவே இந்த விடயம் குறித்து ஆளும் தரப்புடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட தயார் என்றார்.