பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாகச் சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் தவிர்க்க முடியாத இயந்திரக் கோளாறு காரணமாகவே அவ்வாறு இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் யாழ்.நகரிலிருந்து வவுனியா நோக்கிப் புறப்பட்ட தனியார் பயணிகள் பேருந்தொன்று போதிய பயணிகளற்ற காரணத்தால் அரியாலைச் சந்தியில் வைத்து 25 பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு அவர்களைப் பின்னால் வந்த அரச பேருந்தில் ஏற்றி விட்டதாகச் சமூக வலைத்தளங்களில் பரவலாகக் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.
சாரதி சமர்ப்பித்த எழுத்துமூல விளக்கம் மற்றும் ஆதாரங்களின் (திருத்தப் பணிகளுக்கான கட்டணப் பட்டியல்) அடிப்படையில் பேருந்து பயணிகளின் எண்ணிக்கை குறைபாட்டால் சேவையை வேண்டுமென்றே இடைநிறுத்தவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பேருந்து யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திலிருந்து சுமார்- 40 பயணிகளுடன் சேவையை ஆரம்பித்துள்ளது. எனினும், அரியாலைப் பகுதியை அடைந்த போது பேருந்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வீதிப் போக்குவரத்துச் சட்ட நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு சாரதி பேருந்தை உடனடியாக அரியாலையில் நிறுத்தியுள்ளார்.
அத்துடன், இது குறித்துப் பேருந்து நிலைய நேரக் கணிப்பாளருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். பயணிகளை நடுத் தெருவில் இறக்கி விடக் கூடாது என்ற நேரக் கணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைய அவர்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த கதிர்காமம் நோக்கிச் செல்லும் அரச பேருந்தில் பயணிகளைப் பாதுகாப்பாக மாற்றி ஏற்றி விட்டுள்ளனர். குறித்த அரச பேருந்தில் ஆசனங்கள் இல்லாத காரணத்தால் ஒரேயொரு பயணி மாத்திரம் அதில் நின்றுகொண்டு பயணிக்க மறுத்துத் தரிப்பிடத்தில் காத்திருந்ததாகவும், ஏனையோர் அதில் பயணித்ததாகவும் சாரதி தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பேருந்தின் இயந்திரக் கோளாறு காரணமாகவே சேவை இடைநிறுத்தப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் மறுநாள் வவுனியாவில் உள்ள திருத்தகத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்த வேலைகளுக்கான பற்றுச்சீட்டு ஆதாரமும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டவாறு இது குறைந்த பயணிகளுடன் பயணிக்க முடியாது என வேண்டுமென்றே செய்யப்பட்ட செயற்பாடல்ல. தவிர்க்க முடியாத இயந்திரக் கோளாறாலேயே குறித்த இடமாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதைப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்துகின்றேன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





