பொருளாதாரக்கொள்கைகள் நிபுணர்கள் வகுக்கும் எல்லைகளுக்குள் மாத்திரம் இருக்கமுடியாது. மாறாக அவை ஜனநாயகமயப்படுத்தப்படவேண்டும். மக்களின் தேவைகளே பொருளாதாரக்கொள்கைகளைத் தீர்மானிக்கவேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், பிரபல பொருளியலாளருமான கலாநிதி அகிலன் கதிர்காமர், மக்கள் வாழ்வாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய கொள்கைகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட ஒரு ‘மனித உரிமைப் பொருளாதாரம்’ நாட்டுக்கு அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
‘இலங்கையின் அனுபவத்தின் அடிப்படையில் அபிவிருத்தி குறித்து மீளச்சிந்தித்தல்’ எனும் தலைப்பில் நாட்டின் சமகால பொருளாதாரக் கொள்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையின் இலவசக்கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் உணவுப்பொருள் உதவிகள் என்பன ஒரு காலத்தில் அந்நாட்டை உலகளாவிய ‘அபிவிருத்தி முன்மாதிரியாக’ மாற்றியிருந்தன. இருப்பினும் சிக்கன நடவடிக்கைகள் காரணமாக மேற்கொள்ளப்பட்ட வரவு, செலவுத்திட்ட வெட்டுக்கள், மக்களுக்கான வளங்களை உட்கட்டமைப்பு வசதிகளை நோக்கித் திசைதிருப்பின.
அண்மைக்காலம் வரை இலங்கை சுயசார்புடைய நாடாகவும், உலகளாவிய ரீதியில் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் திகழ்ந்தது. இருப்பினும் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை மற்றும் 2024 ஆம் ஆண்டு உலக உணவுத்திட்டத்தினால் வெளியிடப்பட்ட வீட்டுக் கட்டமைப்புக்களின் உணவுப்பாதுகாப்பு மீளாய்வு என்பவற்றின் பிரகாரம், தற்போது சுமார் 10 இலட்சம் மக்கள் நாற்பட்ட போசணைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 9 இலட்சம் பேர் போதிய ஊட்டச்சத்து அடங்கிய உணவைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், பிரபல பொருளியலாளருமான கலாநிதி அகிலன் கதிர்காமரின் கருத்தின் பிரகாரம், பொதுச்சேவை வழங்கல்கள் கடும் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றன. வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. பல்கலைக்கழகங்கள் குறைந்தளவு வளங்களுடன் இயங்குகின்றன. இக்காலப்பகுதியில் நலன்புரித்திட்டங்கள் தொடர்ந்து இலக்குவைக்கப்படுவதனால் தீவிர நெருக்கடிக்கு மத்தியில் பலர் பாதுகாப்பற்ற நிலையில் விடப்படுகின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் உலகளாவிய உரிமைகள் மற்றும் ஏற்றுமதிகளை விட வாழ்வாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய கொள்கைகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட ஒரு ‘மனித உரிமைப் பொருளாதாரம்’ அவசியம் என அகிலன் கதிர்காமர் வலியுறுத்தியுள்ளார்.
‘பொருளாதாரக்கொள்கைகள் நிபுணர்கள் வகுக்கும் எல்லைகளுக்குள் மாத்திரம் இருக்கமுடியாது. மாறாக அவை ஜனநாயகமயப்படுத்தப்படவேண்டும். மக்களின் தேவைகளே பொருளாதாரக்கொள்கைகளைத் தீர்மானிக்கவேண்டும். எனவே இவ்விடயத்தைப் பொறுத்தமட்டில் எமது சிந்தனையில் மாற்றம் ஏற்படவேண்டும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





