அம்பாறையில் வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழம் முதலான பழ வகைகள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன.

குறிப்பாக சம்மாந்துறை – அம்பாறை பிரதான வீதி,  கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கரவண்டி  மோட்டார் சைக்கிள்,  முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

இம்மாவட்டத்தில் தற்போது நிலவி வருகின்ற வறட்சியினால் ஏற்பட்டுள்ள உடல்  ஊஷ்ணத்தை  தவிர்ப்பதற்காக  இந்த வெள்ளரிப்பழம் உட்பட ஏனைய பழ வகைகளை சாப்பிடுவதில் மக்கள் அதிக நாட்டம் செலுத்தி வருகின்றனர்.

வெளியிடங்களில் இருந்து அம்பாறை மாவட்டத்திற்கு கொண்டுசெல்லப்படும்  பழ வகைகளின் தரங்களை பரிசோதிப்பதற்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீன்  ஆலோசனைக்கமைய சுகாதார பரிசோதகர்கள் தினமும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தவிர தற்போது அதிக வெப்பம் காரணமாக  அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழத்துக்கு அதிக தேவை காணப்படுவதுடன் 150 ரூபாய் முதல் சுமார் 650 ரூபாய் வரை வெள்ளரிப்பழம்  சிறியது முதல் பெரியது வரையான பருமனுக்கேற்ப  விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளரிப்பழ வகையானது  பெரும்பாலும் வெப்பமான  காலங்களிலேயே அதிகமாக அறுவடை செய்யப்பட்டு வருகின்றது.

பெரும்பாலும்   மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம், செங்கலடி, களுதாவளை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  பெருமளவில் வெள்ளரிப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இவை  ஏனைய ஊர்களுக்கு விற்பனைக்காக கொண்டுசெல்லப்படுகிறது.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் உடல் உஷ்ணத்தை போக்கும் விதமாக பொதுமக்கள் இளநீர், தோடை, திராட்சை வகைகள், வாழைப்பழங்கள், குளிர்பானம் முதலியவற்றை விற்பனை செய்யும் நிலையங்களை அதிகமாக  நாடுவதையும் காண முடிகிறது.

மேலும் டித்வா சுறாவளி மற்றும் அதனை தொடர்ந்து வந்த மோசனமான வானிலை மாற்றங்களினால் வெள்ளரிச் செய்கை பாதிக்கப்பட்டிருந்ததாகவும் பயிர்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தத்தமது அனுபவங்களை செய்தியாளரிடம் தெரிவித்தனர்.