நிதி முகாமைத்துவ சட்டத்தை மீறி அரசாங்கம் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துகிறது!

நிதி முகாமைத்துவ சட்டத்தை மீறி பாராளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தும் வகையில் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் பங்குச் சந்தை மோசடிகளுடன் தொடர்புடைய நபர்களே இன்று நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கின்றனர் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சுமத்தினார்.

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தை விமர்சிப்பதும், அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும், தேர்தல் மூலம் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதும் ஒரு குடிமகனின் மற்றும் அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமையாகும். அரசாங்கத்தைக் கவிழ்ப்பது என்பது ஜனநாயக ரீதியான ஒரு செயல்முறையாகும்.

இதற்காகவே அரசியல் கட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதாலோ அல்லது காவல்துறையைப் பயன்படுத்தி தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குவதாலோ எமது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது. அரசாங்கம் தனது ஊடகங்கள் வாயிலாகத் தங்கள் மீது சேறு பூசினாலும் மக்கள் உரிய நேரத்தில் சரியான முடிவை எடுப்பார்கள்.

குறிப்பாக நிலக்கரி மோசடி, எரிபொருள் மோசடி மற்றும் நிதி முறைகேடுகள் குறித்து நாம் முன்வைக்கும் ஆதாரங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்குப் பதிலாக, அந்தத் தகவல்களை வெளிப்படுத்தும் நபர்களை அரசாங்கம் குறிவைக்கின்றது.

2009 ஆம் ஆண்டு முதல் நடந்த நிலக்கரி மோசடிகளை விசாரிக்க அரசாங்கம் குழுக்களை நியமிப்பது ஒரு நாடகமாகும். கடந்த நவம்பர் மாதம் நிலக்கரி கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி வரவேண்டிய 25 கப்பல்களில் 15 கப்பல்கள் மட்டுமே இதுவரை வந்துள்ளன.

இதனால் நாட்டில் ஏற்படப்போகும் மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் அதனால் ஏற்படவுள்ள கோடிக்கணக்கான நஷ்டங்களைத் மறைக்கவே அரசாங்கம் பழைய விடயங்களைப் பேசுகின்றது. ஏற்கனவே நிலக்கரி கொள்முதல் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதியரசர் மற்றும் கணக்காய்வாளர் நாயகம் ஆகியோரால் விரிவான அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் புதிய குழுக்களை அமைப்பது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலாகும்.

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக திறைசேரியூடான கொடுக்கல் வாங்கல்களில் மோசடி இடம்பெற்றுள்ளது. இதற்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொறுப்பேற்க வேண்டும்.

நிதி முகாமைத்துவ சட்டத்தின் கீழ் பாராளுமன்றத்துக்கு வழங்க வேண்டிய தகவல்களை வழங்காமல் அரசாங்கம் பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளது.

இதன் மூலம் சட்ட மீறல்கள் இடம்பெற்றுள்ளன. அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மற்றும் பங்குச் சந்தை மோசடிகளுடன் தொடர்புடைய நபர்கள் தற்போது நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்துகின்றனர். அரசாங்கத்தைச் சுற்றியுள்ள இவ்வாறான வர்த்தக மாபியாக்களின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஒரு பிரத்தியேக இணையதளத்தை உருவாக்க உத்தேசித்துள்ளோம் என்றார்.