திருகோணமலை அலஸ்தோட்டம் கடற்கரையில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள்!

திருகோணமலை அலஸ்தோட்டம் கடற்கரைப் பகுதியில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் அகற்றப்படாமையினால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பலரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலையானது சுற்றுலாத்துறைக்கு ஏற்ற இடமாக காணப்படுகின்ற அதேவேளை சுற்றுலாத்துறையின் மூலம் பெருமளவான வருமானத்தை ஈட்டி வருகின்றது.எனினும் திருகோணமலையில் சுற்றுலாப்பயணிகள் தங்கியிருக்கின்ற, நடமாடுகின்ற பகுதிகளில் பெருமளவானவை அசுத்தமான நிலையிலேயே காணப்படுகின்றது.

அந்தவகையில் அலஸ்தோட்டம் கடற்கரைப் பகுதியில் காணப்படுகின்ற பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் ஒழுங்கு முறையில் அகற்றப்படாமையினால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.

குறித்த பகுதியில் பட்டிணமும் சூழலும் பிரதேச சபை உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த திணைக்களங்களினால் முறையான வகையில் கடற்கரை சுத்தப்படுத்தப்படவில்லை எனவும் தன்னார்வ தொண்டர்களின் ஒத்துழைப்புடன் சுத்தப்படுத்தி சேகரித்து வைக்கப்படுகின்ற கழிவுப் பொருட்கள்கூட அகற்றப்படுவதில்லை எனவும் அப்பகுதியில் உள்ள விடுதி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

எனவே சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் முகமாக திருகோணமலை கடற்கரைப் பகுதிகளை சுத்தமாக பேணுவதற்குரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.