அரசின் ஊழல், மோசடி தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் முறைப்பாடு அளிக்கவுள்ளது போலந்து

அரசாங்கத்தின் மோசடிகள் மற்றும் கொள்கலன் விவகாரம் குறித்து முறைப்பாடளித்தவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தலாகும். ஜனாதிபதி நீதித்துறையை முறைகேடாகப் பயன்படுத்துகின்றார். இந்நிலையில் இலங்கையின் ஊழல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் முறைப்பாடளிக்க போலந்து அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், கடந்த அரசாங்கங்களை விட பாரிய மோசடிகளில் ஈடுபட்டு வருகிறது. அவை மிகவும் பகிரங்கமாக முன்னெடுக்கப்படுகின்றமை இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டிய விடயமாகும்.

இவை தொடர்பில் கேள்வியெழுப்பினாலும், பதிலளிப்பதற்கும் அரசாங்கத்தில் யாரும் இல்லை. மோசடிகளால் ஏற்படும் நஷ்டங்களை ஈடு செய்வதற்கு மக்களின் வாழ்க்கை செலவு அதிகரிக்கப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தி ஏற்படுத்துவதாகக் கூறிய புதிய அரசியல் கலாசாரம் இது தானா? இவர்களால் முன்னெடுக்கப்படும் மோசடிகள் இன்று சர்வதேசம் வரை சென்றுள்ளன. அவற்றை மறைப்பதற்கு மோசமான வழிமுறைகளையும் இவர்கள் பின்பற்றுகின்றனர். இந்த அரசாங்கத்தின் மோசடிகளை வெளிப்படுத்துபவர்கள் அவை தொடர்பில் முறைப்பாடளிப்பவர்கள் இரகசியமான முறையில் உயிரிழக்கின்றனர்.

இந்த அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் முதன் முதலாக வெளிப்படுத்தப்பட்ட கொள்கலன் விவகாரம் தொடர்பில் முறைப்பாடளித்த டான் பிரயசாத் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதேபோன்று தற்போது திறைசேரியில் 2.5 மில்லியன் டொலர் மாயமான விவகாரம் தொடர்பில் முறைப்பாடளித்த அதிகாரியும் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்களில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளன.

இவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தமை எந்த வகையில் நியாயமானது என்பதை வாக்களித்த மக்கள் தம்மைத் தாமே கேட்டுக் கொள்ள வேண்டும். மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதை விடுத்து, இந்த அரசாங்கம் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகின்றது. ஜனாதிபதி தனது தவறுகளை மறைப்பதற்காக நீதித்துறையை முறைகேடாகப் பயன்படுத்துகின்றார். 25ஆம் திகதி வழக்கு தீர்ப்பு தொடர்பில் ஜனாதிபதியால் எவ்வாறு முன்கூட்டியே கருத்து வெளியிட முடியும்?

இது ஜனநாயக நாடொன்றில் இடம்பெறக் கூடாத ஒரு விடயமாகும். அரசாங்கம் அதன் மோசடிகளை உள்நாடு கடந்து, சர்வதேசம் வரை வியாபித்துக் கொண்டிருக்கின்றது. எனவே போலந்து அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கம் ஊழல், மோசடிகளில் ஈடுபடுகின்றது என்ற விடயத்தை ஐரோப்பிய ஒன்றியத்தில் முறைப்பாடளிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஏனையவர்களை கள்வர்கள் என விமர்சித்த இந்த அரசாங்கம் தற்போது சர்வதேசத்தால் ஊழல் அரசாங்கமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.