சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விசேட நிகழ்வு

தாதியர் சேவையின் ஸ்தாபகர் புளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (12) சர்வதேச தாதியர் தினம் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டது. இதன் பிரதான நிகழ்வு அகில இலங்கை தாதியர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நரம்பியல் மருத்துவப் பிரிவு மண்டபத்தில் நடைபெற்றது.

“எமது தாதியர் எமது எதிர்காலம், அதிகாரமளிக்கப்பட்ட தாதியர் உயிர்களைக் காப்பார்கள்” எனும் சர்வதேச கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் அமைச்சின் செயளாலர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

தாதியர்களின் தொழில்சார் கௌரவம் மற்றும் அர்ப்பணிப்பை போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வில், பேராசிரியர் சுதத் வர்ணகுலசூரிய மற்றும் பேராசிரியர் நிர்மலா ரத்நாயக்க ஆகியோர் விசேட உரைகளை நிகழ்த்தினர்.

இதன்போது புளோரன்ஸ் நைட்டிங்கேல் நினைவேந்தப்பட்டதுடன், “ஹெதகம” சஞ்சிகையின் உத்தியோகபூர்வ வெளியீடும் நடைபெற்றது.

தாதியர் சங்கத்தின் கல்விச் செயலாளர் பிரசாத் பலிபான நிகழ்வின் நோக்கம் குறித்து விளக்கமளித்தார்.

சுகாதாரத் துறையில் தாதியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த தாதியர் தின கொண்டாட்டங்கள் அமைந்திருந்தன.