பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் தாதியர் பற்றாக்குறை உட்பட பல்வேறு குறைபாடுகள்!

பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நுவரெலியா சுகாதார காரியாலயத்துக்கு மத்திய மாகாண சுகாதார திணைக்களம் பணிப்புரை விடுத்துள்ளது.

அந்த வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் குறித்து தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதி பொதுசெயலாளர் சுப்பையா கமலதாசனால் சுகாதார திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டது.

மத்திய மாகாண சுகாதார பணிப்பாளரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பான அறிக்கையினை நுவரெலியா பிராந்திய பணிப்பாளருக்கு எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைக்கு நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்ட நோயாளர்கள் வெளிநோயாளர் பிரிவுக்கும் மாதாந்த சிகிச்சையினை பெற்றுக்கொள்ளும் பிரிவுக்கும் சமுகமளிக்கின்றனர்.

பொகவந்தலாவை பகுதியில் அவசர தேவை கருதி சுமார் 5 கிராமசேவகர் பிரிவுகளை சார்ந்த மக்களுக்கு இந்த வைத்தியசாலை பயனுள்ளதாக காணப்படுகிறது.

அண்மையில் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவும் பல வசதிகளுடன் புனரமைக்கப்பட்டது.

இவ்வாறு இயங்கி வரும் வைத்தியசாலையில் தற்போது தாதியர்கள் பற்றாக்குறை  ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதங்களில் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைக்கு வருகை தருகின்ற நோயாளர்கள் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்படுவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.