சிறுமியை கடத்திச் சென்ற முச்சக்கரவண்டி மடக்கிப் பிடிப்பு ; இருவர் கைது

மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டுக்குச் சென்ற 16 வயது சிறுமி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்ற முச்சக்கரவண்டியை, சிறுமியின் பெற்றோர் வீதியில் மடக்கிப் பிடித்ததைத் தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (14) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்த சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடத்தலோடு நேரடியாக தொடர்புடைய நபர் இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர்  எனவும் அவர் திருமணமானவர் எனவும் கூறப்படுகிறது.

சந்தேக நபரின் கடத்தல் செயலுக்கு உதவிய குற்றச்சாட்டில் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டு வரும் பொலிஸார், பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லும் சிறுமிகளை குறிவைத்து, அவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து காதலிப்பதாக கூறி ஏமாற்றி, அவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தும் இளைஞர் கும்பல் ஒன்று அப்பகுதியில் நடமாடுவதாக தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் தொடர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத்தடுப்புப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.