கிழக்கு மாகாணத்தில் ‘ரிப்போர்ட்டர் சலீம்’ என்று குறிப்பிட்டால் தெரியாதவர்களே எவருமிலர்; அந்த அளவிற்கு ஊடகத்துறையில் அவரது ஆதிக்கமும் தொடர்பும் பரந்திருந்தன என்று பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் நினைவஞ்சலி மற்றும் ‘கிழக்கின் ஊடக முதுசொம்’ புத்தக வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (17) கொழும்பு தமிழ் சங்கம் சங்கரபப்;பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;
இந்த நூலின் அட்டைப்படம் ஒரே பார்வையிலேயே எமக்குப் பல செய்திகளை உணர்த்தி நிற்கின்றது. 90 ஆண்டுகளில் ஊடகவியலாளர்கள் தங்களது செய்திகளைத் தட்டச்சு செய்து அனுப்புவதற்காகப் பயன்படுத்திய தட்டச்சுப் பொறி , இன்று அருங்காட்சியகங்களில் மாத்திரமே காணப்படுகின்றது. அன்று தொட்டு இன்று வரை ஊடகத்துறையில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வகையான தொழில்நுட்பக் கருவிகளையும் கண்டவராக மறைந்த சகோதரர் ஏ.எல்.எம். சலீம் அவர்கள் திகழ்கின்றார்.
‘சலீம் என்றால் அவர் எப்போதுமே தனது கழுத்தில் ஒரு கேமராவைத் தொங்கவிட்டுக் கொண்டிருப்பார்’ என்று எழுத்தாளர் உமா வரதராஜன் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு மருத்துவருக்கு ‘ஸ்டெதாஸ்கோப்’ அடையாளம் அளிப்பது போல, ஒரு நிருபருக்குரிய முழுமையான அடையாளமாக எமது மறைந்த மூத்த ஊடகவியலாளர் சகோதரர் சலீம் அவர்கள் விளங்கினார். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில், ‘ரிப்போர்ட்டர் சலீம்’ என்ற சொல்லாடலுக்குத் தனி உரிமை கொண்டாடிய ஒரே ஆளுமை அவராகவே இருந்தார்.
தற்போதைய காலகட்டத்தில் ஊடக வெளிச்சம் என்பது ஏதேனும் ஓர் அனுசரணையுடன் அல்லது கட்டணம் செலுத்தப்படும் விளம்பரமாகவே கிடைக்கப் பெறுகின்றது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இத்தகையதொரு பின்னணியில், தனக்கென எவ்வித ஊடக அனுசரணையும் கொண்டிராமல் பொது அரசியலில் நாம் பிரவேசித்த அந்தச் சந்தர்ப்பத்தில், சலீம் எமது கல்முனை மாநகர சபையின் உரைகளுக்குப் பாரிய முக்கியத்துவம் அளித்து, அந்தச் செய்திகளைத் தேசிய நாளிதழ்களில் வெளிக்கொண்டு வந்தார்.
மறைந்த எமது தலைவர் அஷ்ரப் அவர்களை பொறுத்தவரையில், சலீம் என்பவர் வெறுமனே ஒரு செய்தியாளர் மாத்திரமல்லர்; அவர் எமது தலைவரின் தனிப்பட்ட ஊடகப் பிரிவாகவே எங்குமே நிழலாகப் பயணித்தவர்.
எனது தனிப்பட்ட அரசியல் பிரவேசத்தில் பாரிய தாக்கத்தையும் பெரியதொரு பங்களிப்பையும் மறைந்த சகோதரர் சலீம் அவர்கள் ஆற்றியுள்ளார். அவரது ஊடக நடுநிலைமையைப் பற்றி இங்கு எவரும் தனியாகச் சான்று கூறத் தேவையில்லை என்றார்.





