தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பான மிகுந்த மனவேதனையளிக்கும் ஊடகச் செய்திகளை, தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது.
தனது இல்லத்திற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன அந்த சிறுமி, பின்னர் கண்ணம்பாளையம் குளத்திற்கு அருகே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்..
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் திருமதி. விஜயா ரஹத்கர், இவ்விஷயத்தில் உடனடி, கடுமையான மற்றும் காலவரையறைக்குட்பட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஏழு நாட்களுக்குள் விரிவான நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கை (ATR) ஒன்றை ஆணையம் கோரியுள்ளது.
இவ்விஷயத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR), பாரதிய நியாய சம்ஹிதா (BNS) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் பயன்படுத்தப்பட்ட விதிகள், குற்றம் சாட்டப்பட்டவரின் கைது மற்றும் காவலில் வைத்து நடத்தப்பட்ட விசாரணை, பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் பரிசோதனை முடிவுகள், மற்றும் விசாரணையின்போது பயன்படுத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு உள்ளிட்ட சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளது.
.துயரத்தில் இருக்கும் குடும்பத்திற்கு உளவியல் ஆலோசனை, பாதுகாப்பு மற்றும் ஆதரவு வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் ஆணையம் கோரியுள்ளதுடன், இந்த விசாரணையை மிகுந்த உணர்திறனுடனும் அவசரத்துடனும் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.தேசிய மகளிர் ஆணையம் இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், சிறுமிகளுக்கு எதிரான கொடூரமான வன்முறைக் குற்றங்கள் வெறுக்கத்தக்கவை என்றும், அவற்றின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





