ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெரிய அளவிலான பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றின் உரிமையாளருக்கு, பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை ஒரு வருடத்துக்குள் திருப்பிச் செலுத்துமாறு நீதவான் கங்கொடவில உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவு ஆகியவற்றின் முக்கிய அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, நேற்று வெள்ளிக்கிழமை (22) நுகேகொட பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த சந்தேக நபர் கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
சந்தேக நபருக்கு 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்த அவரது சட்டத்தரணி, அதற்கான மதிப்பீட்டு அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாகக் கூறினார்.
அத்துடன், சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்டால் இரண்டு வருடங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை செலுத்துவதாக கோரிக்கை விடுத்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசாரணைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய சட்ட அதிகாரி ஜனக காரியவசம் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் பணத்தைச் செலுத்த 3 வருடங்களுக்கும் மேல் கடந்துள்ளதால், மேலும் தாமதிக்காமல் உடனடியாக இழப்பீடு வழங்கப்படவேண்டும் என அவர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், ஒரு வருட காலத்துக்குள் பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை முழுமையாகத் திருப்பிச் செலுத்தவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் சந்தேக நபருக்குப் பிணை வழங்க உத்தரவிட்டார்.
5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான நான்கு தனிநபர் பிணைகளுடனான பிணை நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மற்றும் அவரது பிணையாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரின் கடவுச்சீட்டும் நீதிமன்றத்தால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பிணையாளர்கள் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் தவறினால், 50 மில்லியன் ரூபாய் பிணைப்பத்திரம் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், உத்தரவிட்டபடி பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணத்தைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், பிணை ரத்து செய்யப்பட்டு சந்தேக நபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்படுவார் எனவும் நீதவான் எச்சரித்துள்ளார்.





