பாணந்துறை பகுதியில் வைத்தியர் ஒருவர், அண்டை வீட்டுக்குத் தீ வைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, நேற்று வெள்ளிக்கிழமை (22) பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாகப் பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை, சிரில் ஜான்ஸ் மாவத்தையில் வசிக்கும் தனியார் வங்கி அதிகாரி ஒருவர், தனது வீட்டுக்கு இந்த வைத்தியர் தீ வைத்துள்ளதாகப் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே வைத்தியரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட வங்கி அதிகாரி வழங்கிய முறைப்பாட்டின்படி, கடந்த மே மாதம் 09ஆம் திகதி அதிகாலை 4.05 மணியளவில், சந்தேக நபரான வைத்தியர், கையில் பந்தம் ஒன்றையும் எரிபொருள் அடங்கிய கேன் ஒன்றையும் எடுத்துக்கொண்டு வங்கியாளரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
அங்கு பெற்றோலைப் பயன்படுத்தி வீட்டில் இருந்த சிசிரிவி கெமராவுக்கு அவர் தீ வைத்துள்ளார். கெமரா மீது பற்றிய தீ, பின்னர் வீடு முழுவதும் பரவியுள்ளது.
சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் பரவிய தீயினால் வீட்டின் சிசிரிவி கெமரா, மின்சார கம்பிகள் இணைந்த கட்டமைப்பு மற்றும் சுவர்கள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
சந்தேக நபரான வைத்தியர் பந்தத்தைக் கொண்டு சிசிரிவி கெமராவிற்குத் தீ வைக்கும் காட்சிகள், அங்கிருந்த மற்றுமொரு கெமராவில் துல்லியமாகப் பதிவாகியிருந்ததாக முறைப்பாட்டாளர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, சந்தேக நபரான வைத்தியரைப் பாணந்துறை தெற்கு பொலிஸார், பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து கைது செய்துள்ளனர். அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்துகொண்ட பின்னர், பொலிஸ் பிணையில் விடுவித்ததாகப் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் என்.டி. உபுல் பிரியங்கர தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.





