‘கடல் கடந்த தீவுகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால், அது வெளிமாவட்டத்தை ஒத்த சேவையாகக் கணிக்கப்படும்’ என்ற விசேட உத்தரவாதத்தை வழங்கி, அங்கு பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைத் தெரிவு செய்யுமாறு வட மாகாண ஆளுநர் வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, காரைநகர் மற்றும் வேலணை ஆகிய தீவகப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் புதன்கிழமை (27) வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில், கடல் கடந்த தீவுகளில் நிலவும் ஆசிரியப் பற்றாக்குறை விவகாரம் பிரதானமாக முன்வைக்கப்பட்டது. அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமை, ஆசிரியர்களுக்கான தங்குமிட மற்றும் போக்குவரத்து வசதிக் குறைபாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டன.
இதற்குப் பதிலளித்த மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், புதிய ஆசிரியர் நியமனங்களில் இப்பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
இதன்போது கடற்தொழில் அமைச்சர், தீவகத்தை ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடாமல் விசேட கவனம் செலுத்தி நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரினார்.
இதனையடுத்து, ஆசிரியர் வெற்றிடங்களை முழுமையாக நிரப்புவதற்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்ததுடன், ‘கடல் கடந்த தீவுகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால், அது வெளிமாவட்டத்தை ஒத்த சேவையாகக் கணிக்கப்படும்’ என்ற விசேட உத்தரவாதத்தை வழங்கி, அங்கு பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைத் தெரிவு செய்யுமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இவ்விசேட கலந்துரையாடலில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் க.இளங்குமரன், ஜெ.றஜீவன், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதி பிரதம செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கடற்படை மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






